Last Updated : 18 Jan, 2014 11:48 AM

 

Published : 18 Jan 2014 11:48 AM
Last Updated : 18 Jan 2014 11:48 AM

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஆக்கிரமிப்பால் தவிக்கும் டென்னிஸ் வீரர்கள்!

சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஆக்கிரமிப்பால் இளம் டென்னிஸ் வீரர்கள் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் மிக முக்கியமான டென்னிஸ் மைதானமாகத் திகழ்வது சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம். இங்கு மெயின் கோர்ட் உள்பட மொத்தம் 7 கோர்ட்கள் உள்ளன. அதில் ஒரு பயிற்சியாளர் ஒரு மார்க்கர் மற்றும் 4 பால் பாய்ஸ்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 7 கோர்ட்களில் இரு கோர்ட்கள் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் வசம் உள்ளன. இங்கு அச்சங்கத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதவிர மெயின் கோர்ட் உள்பட இரு கோர்ட்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விளையாடி வருகின்றனர். இதனால் எஞ்சிய கோர்ட்களில்தான் விளையாட்டு விடுதியைச் சேர்ந்த 7 மாணவிகளும், வெளியில் இருந்து இங்கு வரும் 127 வீரர்களும் பயிற்சிபெற வேண்டியுள்ளது.

வெளியில் இருந்து பயிற்சி பெற வருபவர்களில் 30 பேர் இங்கு உறுப்பினர்களாக உள்ளதாகவும், அவர்கள் ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் பயிற்சிக் கட்டணம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது. உறுப்பினராக அல்லாத எஞ்சிய 97 பேர் மாதக் கட்டணமாக ரூ.600 செலுத்துகிறார்கள். இவர்களுக்கு காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் இரண்டு மணி நேரமும் மட்டுமே பயிற்சியளிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் பயிற்சி பெற 3 கோர்ட்கள் போதுமானதாக இல்லை. மேலும் மார்க்கர் மற்றும் இரு பால் பாய்ஸ்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் விளையாட சென்றுவிடுகின்றனர். இதனால் பயிற்சிபெற வரும் டென்னிஸ் வீரர்கள் மற்றும் அரசு விளையாட்டு விடுதியில் இருக்கும் டென்னிஸ் வீராங்கனைகள் ஆகியோருக்கு போதிய பயிற்சி கிடைப்பதில்லை.

ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமின்றி அவர்களுடைய குழந்தைகளும் சில நேரங்களில் விளையாட வருகின்றனர். நேரப்போக்கிற்காக விளையாட வரும் அவர்களால் டென்னிஸையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ள எங்களைப் போன்ற வீரர்களின் பயிற்சி கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் பணம் கட்டியும் பலனில்லையே என வளர்ந்து வரும் டென்னிஸ் வீரர்கள் ஆதங்கப்படுகின்றனர். விளையாட்டு விடுதியைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனைகள் யாரிடம் சென்று தங்களின் பிரச்சினையை தெரிவிப்பது என தெரியாமல் டென்னிஸ் கோர்ட்டின் அருகில் நின்று மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

கோயம்பேடில் இரு கோர்ட்கள்

கோயம்பேடில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் குடியிருப்பில் அவர்களுக்காக இரு டென்னிஸ் கோர்ட்கள் அமைக்கப்பட்டிருந்தாலும்கூட, அவர்கள் அங்கு விளையாடுவதில்லை. சென்னை நேரு பூங்கா, மேயர் ராதா கிருஷ்ணன் மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் டென்னிஸ் கோர்ட்கள் இருக்கின்றன. ஆனால் ஐஏஎஸ் அதிகாரிகள் நுங்கம்பாக்கத்திற்கு படையெடுப்பதற்குக் காரணம் இங்கு மட்டும்தான் மார்க்கரும், பால் பாய்ஸும் இருக்கிறார்கள்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் விளையாடுவதால் மார்க்கரும், பால் பாய்ஸும் எங்களைப் போன்ற வீரர்களை மட்டுமல்ல, பயிற்சியாளரையும்கூட ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. இளம் வீரர்களின் வளர்ச்சிக்காகத்தான் இங்கு சர்வதேச தரத்திலான கோர்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன; மார்க்கரும், பால் பாய்ஸ்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் இங்கு இருக்கும் பால் பாய்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் பயன்படுத்தி வருவதால் எங்களைப் போன்ற இளம் வீரர்கள் உரிய பயிற்சி பெற முடியாமல் பரிதவிக்கிறோம் என்றனர்.

வேறு வழியில்லை

இது தொடர்பாக எஸ்.டி.ஏ.டி. அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னையின் பல்வேறு மைதானங்களிலும், கிளப்புகளிலும் டென்னிஸ் கோர்ட்கள் உள்ளன. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அங்கு சென்று விளையாடலாம். ஆனால் அவர்களும் இங்குதான் வருகிறார்கள். அவர்களை இங்கு வரக்கூடாது என கீழ்நிலை அதிகாரிகளான எங்களால் சொல்ல முடியாது. அதனால் அவர்களை அனுமதிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அவர்கள் வேறு எங்காவது விளையாட செல்லும்பட்சத்தில் 5 கோர்ட்களில் இளம் டென்னிஸ் வீரர்கள் பயிற்சி பெற முடியும்.

இப்போது ஒரு பயிற்சியாளர், ஒரு மார்க்கர், 4 பால் பாய்ஸ்கள் மட்டுமே உள்ளனர். கூடுதலாக ஒரு உதவிப் பயிற்சியாளரும், 2 பால் பாய்ஸ்களும் நியமிக்கப்படும் பட்சத்தில் வசதியாக இருக்கும். சிறந்த வீரர்களாகக் கண்டறியப்பட்டுள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 3 மணி நேரம் பயிற்சி தேவை. ஆனால் தற்போதைய நிலையில் அவர்களுக்கு ஒரு மணி நேரம் பயிற்சி கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. இதேநிலை தொடருமானால் இனிவரும் காலங்களில் நுங்கம்பாக்கம் விளையாட்டு விடுதியில் (டென்னிஸ்) சேர்வதற்கு யாரும் முன்வரமாட்டார்கள்” என்றார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் (எம்.எஸ்.) ஜெயக்கொடியிடம் கேட்டபோது, “இந்த விஷயம் தொடர்பாக டென்னிஸ் மைதான அதிகாரியிடம் உடனடியாக பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தமிழகத்தில் விளையாட்டை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் செய்து வருகிறது. ஆனால் அவை உரியவர்களுக்கு முழுமையாகச் சென்றடையாததால் பலன் கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x