மும்பை அணி பதற்றப்பட வேண்டிய தேவையே இல்லை: பொலார்ட் நிதானம்

மும்பை அணி பதற்றப்பட வேண்டிய தேவையே இல்லை: பொலார்ட் நிதானம்
Updated on
1 min read

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் 230 ரன்களை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று வான்கடேயில் 223 ரன்கள் வரை வந்து தோல்வி அடைந்தது.

பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை தகுதி பெற்ற பிறகு 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. தகுதி பெற்ற பிறகு எதற்கு பதற்றமடைய வேண்டும்? என்று அதிரடி மும்பை வீரர் கிரன் பொலார்ட் கேட்டுள்ளார்.

நேற்று 24 பந்துகளில் 50 ரன்கள் விளாசிய பொலார்ட் கடைசியில் வெற்றி பெற முடியவில்லை.

இது குறித்து அவர் கூறும்போது, “நாங்களும் மனிதர்கள் அனைத்துப் போட்டியையும் வெல்ல முடியாது என்பதையே இது உணர்த்துகிறது. நாம் ஒவ்வொரு ஆட்டத்திலும் மேம்பட்டிருக்கிறோம். சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக மோசமாக ஆடினோம். ஆனால் நேற்று முடிந்து போன நிலையிலிருந்து போராடினோம்.

எதிரணியினரும் அவர்கள் அளவில் தொழில்ரீதியான கிரிக்கெட் வீரர்களே. ஆகவே எப்போதும் ஆட்டத்தை நம் பக்கம் திருப்பி வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க முடியாது. நாம் பதற்றமடைய வேண்டிய தேவையே இல்லை. நாம் தலையை நிமிர்த்திக் கொள்ளலாம். முதலில் எந்த ஒரு தொடரிலும் தகுதி பெற வேண்டும், நாம் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டோம்.

நாமும் தவறுகள் செய்யக் கூடியவர்களே என்பதை உணர்த்துவதுதான் தோல்வி. 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளோம். அடுத்த போட்டிகளில் உத்வேகம் அடைந்து அடுத்த 3 போட்டிகளையும் வென்றால் சாம்பியன்களாவோம்” என்றார்.

2 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணி புனே அணிக்கு எதிராக தோல்வியுடன் தொடக்கம் கண்டது. அதன் பிறகு 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றது மும்பை.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 138 ரன்களையே எடுக்க திருப்பி அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. நேற்று ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன் இலக்கைத் துரத்தி சாதனையை செய்திருக்க வேண்டியது 7 ரன் தொல்வியில் முடிந்தது.

மும்பை வென்றிருந்தால் பஞ்சாப் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருக்கும், ஆனால் தற்போது கிங்ஸ் லெவன் அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற சிறிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in