Last Updated : 15 Mar, 2017 10:02 AM

 

Published : 15 Mar 2017 10:02 AM
Last Updated : 15 Mar 2017 10:02 AM

100-வது டெஸ்ட்டில் வங்கதேசம்

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே காலே நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணி 259 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தொடரில் 0-1 என வங்கதேச அணி பின்தங்கி உள்ள நிலையில் கொழும்பு நகரில் உள்ள சரவணமுத்து மைதானத்தில் இன்று 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கையுடன் அந்த அணி மோத உள்ளது. வங்கதேச அணிக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும்.

2000-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட்டில் அறிமுகமான அந்த அணி இதுவரை 99 டெஸ்ட்டில் விளையாடி 76 தோல்விகளை பெற்றுள்ளது. 17 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும் வங்கதேச அணி 8 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 15 ஆட்டங்களை டிரா செய்துள்ளது.

எந்த ஒரு அணியும் தனது முதல் 100 டெஸ்ட் போட்டிகளில் இந்த அளவுக்கு அதிக தோல்விகளை பெற்றதில்லை. நியூஸிலாந்து தனது முதல் 100 டெஸ்ட் போட்டிகளில் 7 ஆட்டங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 45 போட்டிகளை டிரா செய்திருந்தது.

வங்கதேச அணி பெற்ற 8 வெற்றிகளில் 4 ஜிம்பாப்வே அணிக்கு எதிரானது. வெளிநாடுகளில் 46 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிகளில் இரண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரானது, ஒரு வெற்றி ஜிம்பாப்வே அணிக்கு எதிரானது.

வங்கதேச அணி 2001 முதல் 2004-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 21 டெஸ்ட்டில் தோல்வி கண்டது. வேறு எந்த அணியும் தொடர்ச்சியாக இப்படி தோல்விகளை சந்தித்தது இல்லை. எனினும் சமீபகாலமாக அந்த அணியின் ஆட்டத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டு தொடரை 1-1 என டிரா செய்திருந்தது. மேலும் கடந்த 4 டெஸ்ட் போட்டிகளையும் அந்த அணி 5 நாட்கள் முழுமையாக விளையாடி உள்ளது. எந்த அணிக்குமே 100-வது போட்டி என்பது வரலாற்று சிறப்புமிக்கதாகவே இருக்கும். இதனால் இந்த போட்டியில் முடிந்தவரை வங்கதேச அணி வெற்றி பெற முயற்சிக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x