Last Updated : 26 Jun, 2016 03:20 PM

 

Published : 26 Jun 2016 03:20 PM
Last Updated : 26 Jun 2016 03:20 PM

யூரோ 2016: கூடுதல் நேர கோலால் குரேஷியாவை வீழ்த்தி காலிறுதியில் போர்ச்சுக்கல்

போர்ச்சுக்கல் வீரர் ரிகார்டோ குரேஸ்மா கூடுதல் நேரத்தில் அடித்த ஒரே கோலால் குரேஷியாவை 1-0 என்று வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி யூரோ 2016 கால்பந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

காலிறுதியில் போலந்து அணியை சந்திக்கிறது போர்ச்சுக்கல்.

90 நிமிட ஆட்டத்தில் இரு அணிகளும் சவாலான தாக்குதல் ஆட்டத்தை ஆடி கடும் போட்டியுடன் நடந்ததால் கோல் வரவில்லை, இதனையடுத்து இன்னொரு பெனால்டி ஷூட் அவுட்தான் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெஞ்சிலிருந்த ரிகார்டோ குரேஸ்மா 87-வது நிமிடத்தில் களம் புகுந்தார். ஆட்டத்தின் 117-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குரேஷிய பகுதியில் அருகிலிருந்து அடித்த கோல் முயற்சியை குரேஷிய கோல் கீப்பர் டேனியல் சுபாசிக் தடுக்க திரும்பி வந்த பந்தை சரியான நிலையிலிருந்த குரேஸ்மா கோலாக மாற்றினார். அப்போது வலை காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே வெற்றிக்கான கோலாக அமைந்தது.

போர்ச்சுக்கல் அணியின் 18 வயது இளம் வீரர் ரெனாட்டோ சான்செஸ், 50-வது நிமிடத்தில் இறங்கி தீப்பொறிகளை கிளப்பினார். சுமார் 30க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பாஸ்கள், 9 தாக்குதல் ஆட்டங்கள், மூன்று முறை குரேஷிய வீரர்களுக்குப் போக்குக் காட்டி பந்தை வெட்டி எடுத்துச் சென்றது என்று ரெனாட்டோ சான்சஸ் போர்ச்சுக்கல் அணியின் எதிர்காலம் என்பதை நிரூபித்தார், இவரது ஆட்டத்திற்காகவே ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

சவாலான தாக்குதல், வேக ஆட்டத்தில் குரேஷியா 15 முறை கோலை நோக்கி அடிக்க முயன்ற ஷாட்கள் எதுவும் இலக்கு நோக்கி பயணிக்கவில்லை. இருஅணிகளுக்குமே குரேஸ்மா கடைசியில் அடித்த ஷாட்தான் இலக்கை சரியாகப் பிடித்தது. 117-வது நிமிட குரேஸ்மா கோலுக்கு முன்னதாக 114-வது நிமிடத்தில் குரேஷிய வீரர் டொமாகோ வீடா என்பவர் தலையால் மேற்கொண்ட முயற்சி கோலுக்கு மேலே சென்றது.

முன்னதாக 25-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு ஃப்ரீ கிக்கை எடுக்க குவெரோ அதனை அருமையாக மீண்டும் எடுத்து பீப்பிடம் அடிக்க 6 அடியிலிருந்து அவரது தலையால் கோல் அடிக்கும் முயற்சி கோலாக மாறவில்லை.

கடைசி 10 சர்வதேச போட்டிகளில் தோல்வியடையாத குரேஷியாவின் தொடர் சாதனை முடிவுக்கு வந்தது. இந்த 10 சர்வதேச போட்டிகளில் 8 வெற்றி 2 மட்டுமே டிரா என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று இவான் பெர்சிக் அடித்த கடைசி நிமிட கோலினால் ஸ்பெயினை 2-1 என்று வீழ்த்தி குரூப் டி-யில் முதலிடம் பிடித்த குரேசியா கடைசியில் அவ்வளவு அச்சுறுத்தல் இல்லாத போர்ச்சுக்கல்லிடம் தோல்வி தழுவி வெளியேறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x