அதிர்ஷ்ட தேவதை சர்பராஸ் அகமட் பக்கம்: மோசமான பீல்டிங்கினால் இலங்கை தோல்வி

அதிர்ஷ்ட தேவதை சர்பராஸ் அகமட் பக்கம்: மோசமான பீல்டிங்கினால் இலங்கை தோல்வி
Updated on
2 min read

கேட்ச்கள் போட்டிகளை வெல்லும் என்பது கிரிக்கெட் மகாவாக்கியம். ஆனால் நேற்று இலங்கை தோற்றதற்கு மிக முக்கியமான காரணம் கேட்ச்களைக் கோட்டைவிட்டதோடு, ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டைவிட்டது, மிஸ்பீல்ட் ஆகியவையுமாகும்.

சர்பராஸ் அகமது சில வேளைகளில் ரன் ஓடியது அவர் எப்படி இந்த மட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரரானார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. முற்றிலும் தவறான ரன் கணிப்புகளை அவர் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார், இலங்கை அந்த வாய்ப்புகளை தொடர்ந்து கோட்டைவிட்ட படியே இருந்தது.

மிஸ்பீல்ட் ஏன் மோசமானது எனில் இருவரில் பலவீனமான மொகமது ஆமீரை அதிக பந்துகளை எதிர்கொள்ள வைத்தால் அவர் ஆட்டமிழந்து விடுவார், அந்நிலையில் மிஸ்பீல்ட் செய்து அவருக்கு சிங்கிள் கொடுத்தால் சர்பராஸ் ஸ்ட்ரைக்கு வருவார். இதுவும் நடந்தது.

பாகிஸ்தானின் 7-வது விக்கெட் விழும்போது அந்த அணியின் வெற்றிக்கு 75 ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கைக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. களத்தில் கேப்டன் சர்பராஸ் அகமதுவும், மொகமது ஆமீரும் இருந்தனர்.

தொடக்கத்திலேயே இலங்கை பீல்டிங் சொதப்பாலாக அமைந்தது.

மலிங்கா வீசிய முதல் ஓவரிலேயே அசார் அலி பாயிண்டில் கட் செய்ய பொதுவாக நல்ல பீல்டரான குணதிலக கேட்சைத் தவறவிட்டார். அசார் அலி அப்போது ரன் எடுக்கவில்லை.

அடுத்த ஓவரிலேயே லக்மல் பந்தில் மீண்டும் ஆஃப் திசையில் அடித்து விட்டு ஒரு சிங்கிள் ஓடும் போது குணதிலகவின் த்ரோ சரியாக அமையாமல் அசார் அலி சுமார் 4 அடி கிரீஸுக்கு வெலீயேற் இருந்த போது ரன் அவுட் வாய்ப்பு பறிபோனது.

மேலும் 8-வது ஓவரில் ஒரு லீடிங் எட்ஜ் அசார் அலிக்கு ஷார்ட் எக்ஸ்ட்ரா கவர் முன்னால் விழுந்தது.

9-வது ஓவரில் ஃபகர் ஸமான், பிரதீப் பந்தை எட்ஜ் செய்ய அதுவும் ஸ்லிப் முன்னால் விழுந்தது.

21-வது ஓவரில் மலிங்கா வீச சர்பராஸ் அகமது ஆஃப் திசையில் அடித்து விட்டு ரன்னுக்காக கபடி ஆடினார், அப்போதும் குணதிலகாவின் த்ரோ ஸ்டம்பை அடிக்கவில்லை.

மீண்டும் 22-வது ஓவரில் சர்பராஸ் அகமது மிட் ஆனில் தட்டி விட்டு ரன் ஓடினார், ஆனால் அங்கு பீல்டர் கண்ணுக்கு ஒரு ஸ்டம்ப்தான் தெரியும் என்பதால் த்ரோ நேரடியாக ஸ்டம்பில் படவில்லை, பட்டிருந்தால் சர்பராஸ் வெளியேறியிருப்பார்.

23-வது ஓவரில் மீண்டும் மலிங்கா பந்தை மிட்விக்கெட்டில் மென்மையாக சர்பராஸ் ஆட கேட்ச் போன்று சென்று பீல்டர் முன்னால் விழுந்தது, தப்பினார்.

29-வது ஓவரில் வெற்றிபெறுவதற்கு தேவையான ரன்கள் 4 கூட இல்லாதபோது சர்பராஸ் மீண்டும் மிட்விக்கெட்டில் தட்டி விட்டு உயிரைவெறுத்து சிங்கிள் ஓடினார், அந்த த்ரோவும் ஸ்டம்பில் பட்டிருந்தால் சர்பராஸ் கதையோடு பாகிஸ்தான் கதையும் முடிந்திருக்கும். இப்படிப்பட்ட தவறான ரன் கணிப்பில்தான் பாஹிம் அஷ்ரப் ரன் அவுட் ஆனார்.

39-வது ஓவரை மலிங்கா வீச, பந்து வேகம் குறைவான ஃபுல் லெந்த் பந்து சர்பராஸ் இந்தப் பந்தைக் கண்டு அதிர்ந்தார், நேராக மிட் ஆனுக்கு மிக எளிதான கேட்ச், ஆனால் பெரேரா அதை சற்றும் நம்ப முடியாத விதத்தில் கோட்டை விட்டார்.

மீண்டும் 41-வது ஓவரில் மலிங்கா வீச பந்து வேகம் குறைந்த பவுன்சர் புல் ஷாட் டாப் எட்ஜ் எடுக்க ஸ்கொயர் லெக் பீல்டர் டைவ் அடித்து கேட்சை விட்டார். இம்முறை பதிலி வீரர் செகுகே பிரசன்னா தவறிழைத்தார்.

முதல் ஓவரிலிருந்து 45-வது ஓவர் வரை களத்தில் கேட்சையும் பந்தையும் வாங்கி வாங்கி விட்டால் எப்படி வெல்ல முடியும்? இதனை இலங்கை நிச்சயம் உணர்ந்திருக்கும்.

எது எப்படியானாலும் எவ்வளவு கேவலமாக ஆடி கேட்சை விட்டாலும், சிறுபிள்ளைத் தனமாக ரன்களை ஓடினாலும் விக்கெட்டை விட்டு விடக்கூடாது என்று அத்தனை ஈகோவையும் மூட்டைக் கட்டி வைத்து விட்டு சர்பராஸ் அகமது ஒரு கேப்டனாக நின்றதுதான் அவர் செய்த ஒரே நல்ல விஷயம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in