Last Updated : 06 Feb, 2014 10:07 AM

 

Published : 06 Feb 2014 10:07 AM
Last Updated : 06 Feb 2014 10:07 AM

சந்தோஷ் டிராபி கால்பந்து: தமிழக அணிக்கு ஊட்டியில் பயிற்சி

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் பிரதான சுற்றில் விளையாடவுள்ள தமிழக அணிக்கு ஊட்டியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் பிரதான சுற்று வரும் 24-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கவுள்ள 10 அணிகளில் தமிழகமும் ஒன்று. தென் மண்டல பிரிவில் முதலிடத்தைப் பிடித்து பிரதான சுற்றை உறுதி செய்த தமிழக அணி, ரயில்வே, கோவா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய அணிகளுடன் “பி” பிரிவில் இடம்பெற்றுள்ளது.

“பி” பிரிவைப் பொறுத்தவரையில் எல்லா அணிகளுமே பலம் வாய்ந்தவையாகும். அதனால் போட்டிகள் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் போட்டிக்கு தயாராவதற்காக தமிழக கால்பந்து அணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒரு வார கால பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் வரும் 10-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

“ஹை ஆல்டிடியூட்” பகுதியான ஊட்டியில் ஆக்சிஜனின் அளவு சற்று குறைவாக இருக்கும். ஊட்டி, சிலிகுரி ஆகிய இரு இடங்களிலுமே ஒரே மாதிரியான காலநிலையே நிலவும். அதனால் இங்கு பயிற்சி பெறும்போது சிலிகுரியில் உள்ள சூழலுக்கு ஏற்றவாறு தமிழக அணியினர் எளிதாக பொருந்த முடியும். ஊட்டியில் பயிற்சியை முடித்தபிறகு சென்னை திரும்பும் தமிழக அணி இங்கு இரண்டு அல்லது 3 பயிற்சி போட்டிகளில் விளையாடிவிட்டு வரும் 20-ம் தேதி சிலிகுரி புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக அணியின் பயிற்சியாளர் ரஞ்சித்திடம் கேட்டபோது, அவர் கூறியது: ஊட்டியில் ஒரு வார காலம் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இங்கு நிலவும் காலநிலையைப் போன்றுதான் சிலிகுரி காலநிலையும் இருக்கும். எனவே ஊட்டியில் பயிற்சி கொடுப்பதால் சிலிகுரியில் நடைபெறும் பிரதான சுற்றில் தமிழக வீரர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது. அங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு எளிதாக பொருந்திவிடுவார்கள். தகுதிச்சுற்றில் விளையாடிய அதே 20 பேர் கொண்டே அணிதான் பிரதான சுற்றிலும் பங்கேற்கவுள்ளது.

தமிழக அணி இடம்பெற்றுள்ள ஏ பிரிவில் கோவா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற வலுவான அணிகள் இருப்பதால் போட்டி கடும் சவாலாக இருக்கும். தமிழக அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. தகுதிச்சுற்றில் தமிழக அணி, கேரளத்தை வீழ்த்தியிருக்கிறது. எனவே தமிழக அணியும் எதிரணிகளுக்கு நிகரான அணிதான்.

பிரதான சுற்றுக்கு முன்னதாக தமிழக அணி 3 பயிற்சி போட்டிகளில் விளையாடுவது அவசியம். பயிற்சி போட்டியை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். எனினும் சிலிகுரிக்கு ரயில் டிக்கெட் கிடைப்பதைப் பொறுத்துதான் எத்தனை பயிற்சி போட்டியில் விளையாடுவது என்பது முடிவு செய்யப்படும். 20-ம் தேதி புறப்படுவதாக இருந்தால் 3 போட்டிகளில் விளையாடமுடியும். ஒருவேளை 19-ம் தேதியே புறப்பட நேர்ந்தால் 3 பயிற்சி போட்டிகளில் விளையாடுவது சாத்தியமில்லை என்றார்.

தகுதிச்சுற்றில் தமிழக அணி 4-5-1 என்ற பார்மட்டில் விளையாடியது. பிரதான சுற்றின்போது அந்த பார்மட்டில் ஏதாவது மாற்றம் இருக்குமா என ரஞ்சித்திடம் கேட்டபோது, “நிச்சயம் மாற்றம் இருக்காது. அதே பார்மட்டில்தான் விளையாடுவோம். அதுதான் தமிழக அணிக்கு பொருத்தமானது. தகுதிச்சுற்றில் 4-5-1 என்ற பார்மட்டில் விளையாடியதால்தான் தமிழகத்துக்கு நிறைய கோல் வாய்ப்புகள் கிடைத்தன.

5 நடுகள வீரர்களும், 4 தடுப்பாட்டக்காரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடும்போது அது எதிரணிக்கு சிக்கலை ஏற்படுத்தும். நமக்கும் நிறைய கோல் வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் தமிழக அணியை வீழ்த்துவதற்காக எதிரணிகள் தங்களின் பார்மட்டை மாற்ற முயல்வார்கள். அது அவர்களுக்கு கடினமானதாக இருக்கும். தமிழக அணியை எளிதாக வீழ்த்திவிடமுடியாது. எங்கள் வீரர்கள் மிகுந்த நம்பிக்கை யோடு உள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x