சம பலத்துடன் 3-வது டெஸ்ட்: அஸ்வின், சாஹா சதமும் மே.இ.தீவுகள் கச்சித ஆட்டமும்

சம பலத்துடன் 3-வது டெஸ்ட்: அஸ்வின், சாஹா சதமும் மே.இ.தீவுகள் கச்சித ஆட்டமும்
Updated on
1 min read

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் மே.இ தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், விருத்தமான் சாஹா இருவரும் சதம் அடித்தனர்.

மதிய தேநீர் இடைவேளைக்கு முன்பு தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை துவக்கிய மே.இ.தீவுகள் அணிக்கு ப்ராத்வெயிட், ஜான்சன் இருவரும் சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். சீரான வேகத்தில் ரன்கள் சேர 19-வது ஓவரில் 50 ரன்களை மே.இ.எட்டியது. 23 ரன்கள் எடுத்திருந்த போது, ஜான்சன் ராகுல் அடித்த டைரக்ட் ஹிட்டால் ரன் அவுட் ஆனார்.

தொடர்ந்து இணை சேர்ந்த டேரன் பிராவோ, பிராத்வெயிட்டுடன் இணைந்து ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். பிராத்வெயிட் 141 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து விக்கெட் இழப்பின்றி ஆடிய மே.இ.தீவுகள் அணி 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 107 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. பிராத்வெயிட் 53 ரன்களுடன், பிராவோ 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

சிக்ஸருடன் சதம் கடந்த அஸ்வின்

234 ரன்களில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 2-ஆம் நாள் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி, தொடர்ந்த அஸ்வின் - சாஹா பார்ட்னர்ஷிப்பால் மேற்கொண்டு விக்கெட் இழப்பின்றி 300 ரன்களை தொட்டது. 99 ரன்கள் எடுத்திருந்த அஸ்வின் உணவு இடைவேளைக்குப் பிறகு 2-வது ஓவரில் க்ரீஸிலிருந்து இறங்கி வந்து பந்தை சிக்ஸருக்கு விரட்டி சதத்தைக் கடந்தார். அடுத்த சில ஓவர்களில் சாஹாவும் சதத்தை எட்ட இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைக் கடந்தது.

சதம் அடித்த அடுத்த ஓவரிலேயே 104 ரன்களுக்கு சாஹா ஆட்டமிழக்க, தொடர்ந்து ஜடேஜா (6), புவனேஸ்வர் குமார் (0), அஸ்வின் (118), இஷாந்த சர்மா (0) என சொற்ப ரன்களில் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஆட்டமிழக்க இந்தியா 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கடைசி 5 விக்கெட்டுகளை இந்தியா 14 ரன்களில் இழந்தது குறிப்பிடத்தக்கது. மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ் மற்றும் ஜோசப் இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in