

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் கால் இறுதியில் 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலை, 8-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் வீழ்த்தினார்.
இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் டொனிமிக் தியம் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் நடாலை வென்றார். இதன் மூலம் இந்த சீசனில் களிமண் தரை ஆடுகளத்தில் தொடர்ச்சியாக 17 ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்த நடாலின் ஆதிக்கத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நடால், கடந்த வாரம் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் இறுதிப் போட்டியில் டொமினிக் தியமை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தார். இந்த தோல்விக்கு தற்போது டொமினிக் தியம் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ குவாஸ் ஜோடி 6-7, 7-6, 10-12 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள பிரான்சின் பியர் ஹூகஸ், நிக்கோலஸ் மஹட் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷ்வேடோவா ஜோடி 3-6, 6-7 என்ற நேர் செட்டில் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், தைவானின் யங் ஜன் ஷான் ஜோடியிடம் தோல்வி கண்டது.