Published : 27 Jun 2016 11:21 AM
Last Updated : 27 Jun 2016 11:21 AM

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து மெஸ்ஸி ஓய்வு

தோல்வி எதிரொலி: நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஓய்வு அறிவிப்பு

கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியைத் தழுவியதாலும், பெனால்டி ஷூட் அவுட்டில் தன்னால் கோல் அடிக்க முடியாமல் போன வெறுப்பினாலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார்.

இதுகுறித்து மெஸ்ஸி கூறும்போது, “மிகவும் கடினமான கணம். என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்வது கடினம். ஓய்வு குறித்து ஆய்ந்து முடிவெடுப்பதும் கடினம், நான் என் அறையில் அமர்ந்து சிந்தித்தேன். அர்ஜென்டினா அணிக்கு விளையாடுவது என்பது என்னை பொறுத்தவரை முடிந்து போன விஷயமாகவே கருதுகிறேன். இது எனக்கானதல்ல" என்றார்.

சிலி அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் 120 நிமிட நேர ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை. பெனால்டி ஷூட் அவுட்டில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அடித்த ஷாட் மேலே சென்றது. இதனால் அர்ஜென்டினா அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது. | விரிவான ரிப்போர்ட் >> மெஸ்ஸி தவறவிட்ட பெனால்டி கோல்; அர்ஜென்டினாவை வீழ்த்தி சிலி சாம்பியன் |

மெஸ்ஸி விளையாடிய இந்தக் காலக்கட்டத்தில் அர்ஜென்டினா அணி பெரிய தொடர்கள் எதிலும் வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய தொடர் ஒன்றில் சாம்பியன் ஆகும் வாய்ப்பு கிட்டியும், கோல் முயற்சிகளும் பலனளிக்காமல் பெனால்டி ஷூட் அவுட்டிலும் தனது ஷாட்டே தவறாகப் போக மெஸ்ஸி கடும் வெறுப்படைந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x