

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒருமாதிரியான ஆக்சனுடன் வீசிய குஜராத் லயன்ஸ் இடது கை ஸ்பின்னர் ஷிவில் கவுஷிக் என்பவரை பலரும் கண்டிருக்கக் கூடும். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு நேரடியாக நுழைந்தவர், இன்னமும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இடது கையை உயர்த்தி உடம்பை தாறுமாறாக வளைத்து பந்தை தனது ரிஸ்டின் உதறலுடன் சரியான லெந்தில் வீசி அசத்திய ஷிவில் கவுஷிக், அசப்பில் தென் ஆப்பிரிக்காவில் இதே போல் வீசிய பால் ஆடம்ஸ் என்ற இடது கை ஸ்பின்னரை நினைவு படுத்துகிறார். இடது கை லெக் ஸ்பின், கூக்ளி, என்று பல ஆயுதங்களை தன் விரல்களிலும் மணிக்கட்டிலும் பதுக்கி வைத்துள்ளார் ஷிவில் கவுஷிக்.
இது மிக மிகக் கடினமான ஆக்சன், ஒருவரும் இதனைப் பார்த்து அப்படியே காப்பி அடித்து வீச முடியாது. இந்த ஆக்சன் அவருக்கு இயல்பாகவே அமைந்த ஆக்சன்.
ஷிவில் கவுஷிக் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பெங்களூரைச் சேர்ந்த ஷிவில் கவுஷிக் ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “நான் பால் ஆடம்ஸ் அல்லது வேறு ஒருவரைப் பார்த்து தூண்டப்படவில்லை. இந்த மாதிரி வீசும் முறை எனக்கு கடவுள் கொடுத்தது. இது எனக்கு இயல்பாகவே அமைந்தது. ஆனால் பிற்பாடு எனக்கு 14, 15 வயதான போது பால் ஆடம்ஸ் வீசியதை வீடியோவில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் நினைத்தேன், ‘அவர் நாட்டுக்காக ஆடியுள்ளார், நாமும் ஏன் ஆட முடியாது’ என்ற சிந்தனை எனக்குள் எழுந்தது. நான் எனது ஆக்சனை மாற்ற விரும்பவில்லை. ஏனெனில் இது கிளிக் ஆகிவிட்டால் பெரிய அளவில் வெற்றி பெறுவேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
எனது, உடலை வளைத்து நெளித்துப் பந்து வீசும் முறையால் காயமடைந்து விடுவேன் என்று பலரும் கூறுகின்றனர், ஆனால் இது இம்மாதிரியான ஆக்சனை மிகவும் அரிதாகவே பார்ப்பதால் அவர்களுக்கு ஏற்படும் உணர்வு.
நான் இம்ரான் தாஹிருடன் பேச ஆர்வமாக இருந்தேன். அவரிடம் 6 தினுசு பிளிப்பர் முறை பந்துவீச்சு உத்தி உள்ளன. அவரை எனக்கு மயங்க் அகர்வால் அறிமுகம் செய்ய அவரிடம் பேசினேன். ஆனால் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் பிளிப்பர் எனக்கு கடினமான ஒரு பந்தாகத் தெரிகிறது. இருந்தாலும் நான் இதனை நன்றாகப் பயிற்சி செய்து வருகிறேன்.
ரகுராம் பட் (கர்நாடகா, இந்தியா முன்னாள் இடது கை ஸ்பின்னர்) எனக்கு பலவிதங்களில் வீசுவது குறித்து கற்றுக் கொடுத்தார், பந்தில் விரல்களை வெவ்வேறு விதங்களில் பிடித்து கொள்வது பற்றி அவர் எனக்கு சொல்லிக் கொடுத்தார்” என்றார்.
கர்நாடகாவில் ஸ்பின் ஸ்டார்ஸ் போட்டி நடைபெற்ற போது 3,000 போட்டியாளர்களைக் கடந்து ஷிவில் கவுஷிக் அதில் வெற்றி பெற்றார். அனில் கும்பிளே மற்றும் லெக் ஸ்பின் லெஜண்ட் சந்திரசேகர் ஆகியோர் அந்த நிகழ்வின் சூப்பர்வைசர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனில் கும்பிளே, ஷிவில் கவுஷிக்கை அதன் பிறகு பயிற்சிக்காக மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அழைத்துச் சென்றார். அங்கு அவர் 4 ஓவர்களை வீசி 13 ரன்களை கொடுத்து 4 விக்கெடுகளைக் கைப்பற்றினார். பிறகு சச்சின் டெண்டுல்கரை சந்தித்தார் கவுஷிக், சச்சின் அவருக்கு பந்தின் தையலை குறுக்காக வைத்து வீசும் வேகப்பந்தை வீசுமாறு அறிவுரை வழங்க அதன்படியே அந்த பந்துவீச்சையும் கற்றுத் தேறினார் கவுஷிக்.
ஆனாலும் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் கவுஷிக்குக்கு டி20 கிரிக்கெட்டின் கொடூரமான முகமும் திறந்து காட்டப்பட்டது. விராட் கோலியிடம் சிக்கினார். ஒரே ஓவரில் 30 ரன்களை கோலி விளாசித் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.