

யூரோ கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றில் நேற்று முன்தினம் இரவு செயின்ட் டெனிஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின், இத்தாலி அணியை எதிர்த்து விளையாடியது. இத்தாலி தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்திடம் தோல்வி கண்டிருந்ததால் இந்த ஆட்டத்தில் 7 மாற்றங்களை செய்தார் பயிற்சியாளர் ஆண்டனி கோன்ட்டி. தொடக்கம் முதலே இத்தாலி வீரர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். 11-வது நிமிடத்தில் இத்தாலியின் கோல் அடிக்கும் வாய்ப்பை, ஸ்பெயின் கோல் கீப்பர் டி ஜியா அபாரமாக தடுத்தார். ஆனாலும் 33-வது நிமிடத்தில் இத்தாலியின் செலினி கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார். இந்த கோலை அடிக்க அந்த அணியின் இமானுலி ஜியாசெர்னி உதவினார்.
முதல் பாதி முடியும் 45-வது நிமிடத்தில் இலக்கை நோக்கி துல்லி யமாக இத்தாலி வீரர் ஈடர் அடித்த பந்தை டி ஜியா அருமையாக தடுத்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி முன்னிலை பெற்றிருந்தது. 2-வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
வழக்கமான நேரம் முடிந்ததும் இன்சுரி நேரமாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில் முதல் நிமிடத்திலேயே இத்தாலியின் பெல்லே கோல் அடித்து அசத்தினார். முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி, இத்தாலி காலிறுதிக்கு முன்னேறியது. கால் இறுதியில் இத்தாலி அணி, ஜெர்மனியை எதிர்கொள்கிறது.