59 பந்துகளில் 126 ரன்கள் விளாசினார் வார்னர்: கொல்கத்தாவை வீழ்த்தியது சன் ரைசர்ஸ்

59 பந்துகளில் 126 ரன்கள் விளாசினார் வார்னர்: கொல்கத்தாவை வீழ்த்தியது சன் ரைசர்ஸ்
Updated on
2 min read

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் நல்ல பந்து வீச்சுத் திறமையுடைய கொல்கத்தா அணியை டேவிட் வார்னர் நேற்று புரட்டி எடுத்தார். அவர் 59 பந்துகளில் 10 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 126 ரன்கள் விளாச சன் ரைசர்ஸ் அணி 209 ரன்களைக் குவித்தது.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்களையே எடுக்க முடிந்தது.

வார்னர் 43 பந்துகளில் சதம் கண்டதும் குறிப்பிடத்தக்கது. இது ஐபிஎல் கிரிக்கெட்டில் 5-வது அதிவேக சதமாகும்.வார்னரும் ஷிகர் தவணும் 12.4 ஓவர்களில் 139 ரன்களை சேர்த்ததில் தவண் பங்களிப்பு 29 ரன்கள் மட்டுமே. தவண் அப்போது ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

வார்னர் நேற்று ஆடியது கிறிஸ் கெய்லின் இல்லாத பார்முக்கு பதிலீடாக அமைந்தது. 11-வது ஓவரில் சதம் அடித்தார் வார்னர்.

மேலும் கொல்கத்தாவுக்கு எதிராக அதிகபட்ச ரன்களை எடுத்த அணியாகவும் திகழ்கிறது சன் ரைசர்ஸ்.

வார்னர் என்ன மூடில் இறங்கினார் என்று தெரியவில்லை, சக பவுலரான கூல்டர் நைல் முதல் பந்தை வீச மேலேறி வந்து சுழற்றினார் வார்னர் ஆனால் மாட்டவில்லை. அதன் பிறகு மிட் ஆஃப் மீது ஒரு ஷாட்டை தூக்கி அடித்து பவுண்டரி அடித்தார்.

பிறகு உமேஷ் யாதவ்வை அதே மிட் ஆஃபில் மிகப்பெரிய சிக்ஸ் அடித்தார்.

அதே ஓவரில் ஒரு அரிதான கேட்ச் வாய்ப்பு கிடைத்தது, உமேஷ் யாதவ் தனது ஷார்ட் பிட்ச் பந்துகள் மூலம் கிறிஸ் கெய்லுக்கே ஆங்காங்கே அடி கொடுத்தவர். வார்னருக்கும் அப்படிப்பட்ட ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார் வார்னர் புல் ஆடினார் ஆனால் சரியாக சிக்கவில்லை மிட் ஆனில் பந்து மேலே கிளம்பியது, வோக்ஸ் பின்னாலேயே சென்று கேட்ச் பிடிக்கலாம் என்று பார்த்தார் முடியவில்லை, அவர் கொஞ்சம் முயன்று ஒரு அபாரக் கேட்சை எடுத்திருந்தால் வார்னர் இன்னிங்ஸ் திருப்பு முனையாக அமைந்திருக்காது.

யாதவ்வுக்குப் பிறகு வோக்ஸ், யூசுப் பத்தானை வாங்கு வாங்கென்று வாங்கினார் வார்னர். 4 ஓவர்கள் முடிவில் 52 ரன்கள் வந்தது. வார்னர் இதில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 44 ரன்கள். பிறகு சுனில் நரைன் வந்தவுடன் மட்டையை இன்னொரு கையில் மாற்றிக் கொண்டு ஸ்விட்ச் ஹிட் அடித்தார் அது தேர்ட்மேன் திசையில் சிக்ஸ் ஆக, நரைனுக்கு நல் வணக்கம் அளித்த வார்னர் 25 பந்துகளில் அரைசதம் எடுத்தார். கம்பீர் என்னென்னவோ செய்து பார்த்தார் வார்னரை நிறுத்த முடியவில்லை. 25 பந்துகளில் அரைசதம் அடுத்த 18 பந்துகளில் இன்னொரு அரைசதம் அடித்து 43 பந்துகளில் சதம் கண்டவர் விட்டிருந்தால் இரட்டைச் சதம் அடித்து விடுவார் என்பது போல்தான் தெரிந்தது.

ஒவ்வொரு 3-வது பந்திலும் பவுண்டரி அடித்தார் வார்னர். முதலில் உமேஷ் யாதவ் பந்தில் கேட்ச் கொடுத்த போது வோக்ஸ் பின்னால் ஓடாமல் திரும்பி ஓடியிருந்தால் கேட்ச் ஆகியிருக்கும், இரண்டாவது முறை வோக்ஸ் கேட்ச் விட்ட போது வார்னர் 86-லிருந்து 92-க்கு நகர்ந்தார்.

ஆனாலும் நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியின் 10 ஓவர்கள் 123 ரன்கள் அதிரடிக்குப் பிறகு ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது. கடைசியில் வோக்ஸ்தான் வார்னரை வீழ்த்தினார் ஆனல் கேன் வில்லியம்சனின் 25 பந்து 40 ரன்கள் ஹைதராபாத் அணியின் ஸ்கோரை 200ஐ தாண்டிக் கொண்டு சென்றது.

210 ரன்கள் இலக்கை எதிர்த்து கொல்கத்தா களமிறங்கிய போது சுனில் நரைனையும், கவுதம் கம்பீரையும் ஸ்கோர் 12ஆக இருந்த போது இழந்தது.

உத்தப்பா 4 பவுண்டரிக்ள் 4 சிக்சர்களுடன் 28 பந்துகளில் 53 விளாசினார், அதிலும் ரஷீத் கானை அவர் அடித்த 2 மிகப்பெரிய சிக்சர்கள் அபாரமானது. சிராஜ் உத்தப்பாவை வீழ்த்திய பிறகே 45 பந்துகளில் 101 ரன்கள் எப்போதும் கடினமே. சன் ரைசர்ஸ் அணியில் புவனேஷ், சிராஜ், கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் டேவிட் வார்னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in