Published : 15 Mar 2017 02:29 PM
Last Updated : 15 Mar 2017 02:29 PM

உள்ளுக்குள் நானும் ஒரு இந்தியர்தான்: மைக்கேல் கிளார்க்

இந்திய உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், உள்ளுக்குள் தானும் ஒரு இந்தியர்தான் என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் ஃபனாடிக் ஸ்போர்ட்ஸ் மியூசியத்தில் தனது ‘மை ஸ்டோரி’ புத்தக அறிமுக நிகழ்ச்சியில் கிளார்க், கங்குலி இருவரும் கலந்து கொண்டனர், அப்போது இருவரும் இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்பு, பகைமை, சர்ச்சைகள் ஆகியவை பற்றி நகைச்சுவையுடனும் ரிலாக்ஸாகவும் பேசினர்.

பெங்களூரு டெஸ்ட் போட்டி ஸ்மித் டி.ஆர்.எஸ். சர்ச்சைக்குப் பிறகு இருநாட்டு வாரியங்களும் ஆலோசனை நடத்தி கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவோம் என்று முடிவெடுத்ததையடுத்து, கிளார்க் கூறும்போது, “இரு வாரியங்களும், இரு கேப்டன்களும் பேசி எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது, கிரிக்கெட்டுக்கு இது நல்லது.

2008-ம் ஆண்டு ஹர்பஜன், சைமண்ட்ஸ் இடையே ஏற்பட்ட நிறவெறி வசை சர்ச்சைக்குக் கூட இப்படி ஒரு முடிவெடுத்திருக்கலாம், ஆனால் அது தேவையற்ற ஒரு தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

நான் அப்போது சைமண்ட்சுடன் நெருங்கி பழகி வந்தேன். நிறவெறி வசையாக உணர்ந்தாரா என்று நான் அவரிடம் கேட்டேன். எது எப்படியோ அது மைதானத்திலேயே முடிந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

நடப்புத் தொடர் பற்றி கூற வேண்டுமெனில் இந்தியா அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை என்றே கருதுகிறேன், ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக இந்திய அணி சிறந்த அணி, ஆனால் நேதன் லயன், ஓகீஃப் ஆகியோரை பாராட்டியே ஆகவேண்டும். ஸ்பின்னுக்குச் சாதகமான பிட்ச்தான் என்றாலும் அதிலும் திறமையை நிரூபிக்க வேண்டுமே.

கேப்டன் கோலிக்கு அவருக்கேயுரிய பாணி உள்ளது. அவருக்கு ஆட்டத்தின் மீது நேசம், உணர்வு, ஆசை எல்லாம் உள்ளது. எப்படியிருந்தாலும் வெற்றி என்பதே குறிக்கோள் என்பதாக ஆடுகிறார், தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை வெற்றிக்கு முயற்சி செய்வோம் என்று கோலி எடுக்கும் ரிஸ்க் அவரது ஆக்ரோஷத்தைக் காட்டுகிறது. இது உண்மையில் ஒரு நல்ல சவாலான குணாம்சமாகும்.

நான் இந்தப் புத்தகத்தை எழுத பலகாரணங்களில் ஒன்று நான் விராட் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் சூழ்நிலையைக் கையாண்ட விதம் எனக்கு அவர் மீது மரியாதையை ஏற்படுத்தியது. பிலிப் ஹியூஸ் மரணத்தின் போது விராட் கோலி வந்திருந்தது எனக்கு இன்னமும் நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. கிரிக்கெட்டை விட அந்தக் காலக்கட்டம் மிகப்பெரியது. இந்தியா வரவில்லை என்று கூறியிருக்கலாம். ஆனால் அப்படி கூறவில்லை, எனது சக வீரர், நண்பர் பிலிப் ஹியூஸ் இறுதிச்சடங்குக்குக் கோலி, இந்திய அணி வந்திருந்ததை என்னால் மறக்க முடியாது.

இந்தியாவுடன் எனக்கு ஒரு பிணைப்பு இருந்து வந்துள்ளது. இந்திய வம்சாவளி பயிற்சியாளரிடம் கிரிக்கெட் பயின்றேன், இந்தியாவில்தான் முதல் டெஸ்ட் சதம் எடுத்தேன். இந்திய உணவு எனக்கு மிகவும் பிடித்தமானது. உள்ளுக்குள் நானும் ஒரு இந்தியனே” என்றார் மைக்கேல் கிளார்க்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x