

நீஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் பிரேசிலில் உள்ள ரியோ நகரில் நடக்கவுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள நீஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பிரேசிலின் தற்காலிக அதிபர் மைக்கேல் டெமர், நேற்று கேபினட் அமைச்சர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்கு பிறகு பிரேசிலின் உளவுத்துறை தலைவர் செர்ஜியோ எட்சிகோயன் நிருபர்களிடம் கூறியதாவது:
நீஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 85 ஆயிரம் போலீஸாரும், ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள். தீவிரவாத தாக்குதலை ஒடுக்குவது தொடர்பான பாதுகாப்பு ஒத்திகையில் அவர்கள் ஈடுபடுவார்கள். பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு ரசிகர்கள் கண்காணிக்கப்படுவார்கள். இதற்கு ரசிகர்களும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.