Published : 01 Jun 2017 01:49 PM
Last Updated : 01 Jun 2017 01:49 PM

சாம்பியன்ஸ் டிராபி தொடரை சிறப்பித்த கூகுள் டூடுல்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் அப்போட்டிகளுக்காக கூகுள் டூடுல் அனிமேஷன் விளையாட்டு ஒன்றை அறிமுகம் செய்து சிறப்பித்துள்ளது.

8-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. இதில் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த தொடர் வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் மோத உள்ளன. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு துவங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்குவதை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் விளையாட்டு ஒன்றை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

கூகுளின் முகப்புப் பக்கத்தில் கையில் பேட்டுடன் கிரிக்கெட் பூச்சி ( தெள்ளு பூச்சி ) காணப்படுகிறது. அதனை கிளிக் செய்தால் கிரிக்கெட் மைதானத்துக்கு செல்கிறது. அதில் கிரிக்கெட் பூச்சி கையில் பேட்டுடன் நிற்கிறது. பவுலர் மற்றும் பில்டிங்கில் நத்தைகள் உள்ளன. கூகுள் தேடலுக்கு முன்புள்ள வட்டவடிவ பேட் போன்ற குறியை நீங்கள் கிளிக் செய்தால், கிரிக்கெட் பூச்சி தனது பேட்டை சுழற்றி பந்தை எதிர் கொள்கிறது. நீங்கள் ரன் அடித்தால் மைதானத்தை சுற்றி பலூன்கள் பறக்கின்றன.

நீங்கள் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்துவிட்டீர்கள் என்றால் கிரிக்கெட் பூச்சி சோகமான வாத்தாக மாறி விடுகிறது. மீண்டும் பேட் குறியை கிளிக் செய்து நீங்கள் ஆட்டத்தை தொடரலாம்.

எந்த மெதுவான இணைய சேவையிலும் இந்த விளையாட்டை தொடரலாம் என்பதற்காக கிரிக்கெட் பூச்சி மற்றும் நத்தை பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூகுள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராப்பி தொடருக்கான கூகுளின் இந்த டூடுலுக்கு சமூக ஊடகங்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x