வெயிட்டர் வேலையிலிருந்து மும்பை இந்தியன்ஸ் வரை: இளம் வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கேஜ்ரோலியாவின் பயணம்

வெயிட்டர் வேலையிலிருந்து மும்பை இந்தியன்ஸ் வரை: இளம் வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கேஜ்ரோலியாவின் பயணம்
Updated on
2 min read

2017 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் குல்வந்த் கேஜ்ரோலியா என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த 25 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளரான கேஜ்ரோலியாவுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பளிக்க முடியாமல் போனது. ஆனாலும் இவர் திடீரென இந்நிலைக்கு உயர்ந்ததன் பின்னணியில் சுவாரசியமான பயணம் ஒன்று உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்த போது டெல்லிக்கோ, ராஜஸ்தானுக்கோ குல்வந்த் கேஜ்ரோலியா ஒரு போட்டியில் கூட ஆடியதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால் அதன் பிறகு விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்காக அறிமுகமானார் குல்வந்த் கேஜ்ரோலியா. இந்தத் தொடரில் டெல்லி அணி காலிறுதிக்கு முன்னேறத் தவறினாலும் குல்வந்த் கேஜ்ரோலியாவின் பந்து வீச்சு கவன ஈர்ப்பு பெற்றது. 7 போட்டிகளில் இவர் 17 விக்கெட்டுகளை 4.79 என்ற சிக்கனவிகிதத்தில் கைப்பற்றினார்.

இவர் கிரிக்கெட்டில் தனது இலக்கை நிர்ணையித்துள்ளார் என்பது கேஜ்ரோலியாவின் குடும்பத்தினருக்குத் தெரியாது. இவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட பணத்தேவை காரணமாக கோவாவில் ஒரு உணவு விடுதியில் வெயிட்டராகப் பணியில் சேர்ந்தார்.

கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தவுடன், தன் குடும்பத்தினரிடம் தான் நண்பர் ஒருவருடன் அகமதாபாத்தில் பணியாற்றப் போகிறேன் என்று கூறிவிட்டு டெல்லிக்கு வந்து எல்.பி.சாஸ்திரி கிளப்பில் இணைந்தார். இந்தக் கிளப்தான் கம்பீர், உன்முக்த் சந்த், நிதிஷ் ரானா ஆகியோரை கிர்க்கெட் உலகிற்கு அளித்தது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் தன்னுடைய பின்னணி பற்றி குல்வந்த் கேஜ்ரோலியா கூறியதாவது:

நான் ஓராண்டுக்கு முன்னர்தான் கிரிக்கெட் ஆடத் தொடங்கினேன். அதற்கு முன்பாக கோவா உணவு விடுதி ஒன்றில் வெயிட்டராக பணியாற்றி வந்தேன். நான் கிரிக்கெட் ஆடுகிறேன் என்று என் குடும்பத்திற்குத் தெரிவிக்கவில்லை. படிப்பில் நான் சிறந்து விளங்கவில்லை. நிறைய தொழில்முறை தேர்வுகள் எழுதினேன், ஆனால் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

எனவே எங்கள் குடும்பத்துக்கு பணத்தேவை ஏற்பட நான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போதுதான் என் நண்பன் என்னிடம் கிரிக்கெட் திறமை உள்ளது என்று அடையாளப்படுத்தினான். ஆனால் நான் என் குடும்பத்தாரிடம் நண்பர் தொடங்கியுள்ள டிரான்ஸ்போர்ட் தொழிலில் வேலைக்குச் செல்வதாகக் கூறினேன் ஆனால் நான் போனதோ டெல்லிக்கு.

டெல்லியில் எல்பி சாஸ்திரி கிளப்புக்குச் சென்றேன். இங்கிருந்துதான் கம்பீர், உன்முக்த் சந்த், ரானா போன்ற வீரர்கள் வந்துள்ளார்கள். என்னிடம் ஸ்பைக்ஸுடன் கூடிய ஒரு நல்ல ஷூ கூட இல்லை. என் பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் என் ஷூ பற்றி கேட்ட போது நான் அவரிடம் என் நிலைமைகளை விளக்கினேன்.

அவர் உடனே வளரும் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் என்னைத் தங்க வைத்தார். அங்கிருந்துதான் தினமும் கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டேன். நாள் முழுதும் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியிலேயே இருந்தேன். மாலை வேலைகளில் ஜிம்மில் உடற்பயிற்சியில் நேரத்தைச் செலவிட்டேன். நான் இன்று கிரிக்கெட் வீரராக இருக்கிறேன் என்றால் அதற்கு சஞ்சய் பரத்வாஜ்தான் காரணம். அவர் என்னை அவரது மகன் போல் பாவித்து ஆதரவளித்தார்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் என்னை எடுத்தார்கள், என்னுடைய சொந்த ஊரில் தெரிந்தவர்கள் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இவ்வாறு கூறினார் கேஜ்ரோலியா.

ஆனால் இம்முறை ஒரு போட்டியில் கூட இந்த இளம் வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பளிக்கப்பட முடியாமல் போயுள்ளது. இருப்பினும் வெயிட்டராக இருந்து தன்னம்பிக்கையுடன் டெல்லிக்கு வந்து அங்கு கடுமையாக உழைத்து டெல்லி அணிக்கு விஜய் ஹசாரே டிராபியில் ஆடி வெற்றி கண்டுள்ள குல்வந்த் கேஜ்ரோலியா நிச்சயம் ஒருநாள் இந்திய அணியில் ஜொலிப்பார் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in