

ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் ரன்களை வாரி வழங்கி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்ததற்காக கவலைப்பட வேண்டாம் என்றும், இது அனைத்து பௌலர்களுக்கும் நடக்கக்கூடியதுதான் என்றும் இஷாந்த் சர்மாவுக்கு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர் ஆறுதல் கூறியுள்ளார்.
மொஹாலியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இஷாந்த் சர்மா வீசிய 48-வது ஓவரில் பாக்னர் 4 சிக்ஸர்கள் உள்பட 30 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.
அது குறித்து பாக்னர் கூறும்போது, “இன்று இஷாந்துக்கு ஏற்பட்ட நிலைமை எல்லா பௌலர்களுக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். இதுபோன்ற சூழலில் பந்துவீசும்போது கடுமையான நெருக்கடி இருக்கும். நானும் சில நேரங்களில் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணமாக இருந்திருக்கிறேன்.
இஷாந்த் சர்மாவுக்கு இந்தப் போட்டியில் ஏற்பட்ட நிலை எனக்கும் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. அதனால் இந்தப் போட்டியில் மோசமாக பந்துவீசியதற்காக இஷாந்த் சர்மா கவலைப்பட தேவையில்லை. மற்றொரு போட்டியில் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்துவீசும்போது, இந்தியாவுக்கு வெற்றி தேடித்தர முடியும். அதுதான் கிரிக்கெட்” என்றார்.
இதனிடையே, ஒரு சில ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக, வீரர்களை அணியில் இருந்து நீக்குவது முறையல்ல என்று இந்திய கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.