

லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் இரட்டையர் பிரிவில் இணைந்து விளையாட ரோஜர் பெடரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய வீரர்களுக்கும், உலக அணி வீரர்களுக்கும் இடை யிலான முதலாவது லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி செக் குடியரசின் தலைநகரான பிராக்கில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஐரோப்பிய அணிக்கு சுவீடனின் முன்னாள் வீரர் பிஜோர்ன் போர்க்கும், உலக அணிக்கு அமெரிக்காவின் ஜான் மெக் என்ரோவும் கேப்டனாக செயல்பட உள்ளனர்.
இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் 9 ஆட்டங்களும், இரட்டை யர் பிரிவில் 3 ஆட்டங்களும் நடை பெற உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலிய டென்னிஸ் ஜாம்ப வான் ராடு லேவரின் நினைவாக நடத்தப்படுகிறது. காலண்டர் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற கடைசி வீரர் ராடு லேவர்தான். காலண்டர் கிராண்ட் ஸ்லாம் என்பது ஒரே ஆண்டில் நடத்தப் படும் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங் களையும் வெல்வதாகும். இந்த சாதனையை ராடு லேவர் கடந்த 1969-ல் நிகழ்த்தினார்.
இந்தப் போட்டிக்கான அட்ட வணை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரரும் கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றவருமான ரோஜர் பெடரர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, “லேவர் கோப்பை டென்னிஸ் கண் காட்சிப் போட்டி இல்லை. இது மிகவும் சவாலாக இருக்கும். இதன் இரட்டையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாட ஆவலாக இருக்கிறேன். நான் எப்பாதும் நடாலுடன் விளை யாட விரும்புவேன்’’ என்றார்.
லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் வரும் செப்டம்பர் 22-ம்தேதி முதல் 24-ம் தேதிவரை நடைபெறு கிறது. ஒலிம்பிக் போட்டி நடை பெறும் ஆண்டை மட்டும் தவிர்த்து ஒவ்வொரு ஆண்டும் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 4 ஆட்டங்கள் நடத்தப்படும். இதில் 3 ஒற்றையர் பிரிவு ஆட்டங்களும், ஒரு இரட்டையர் பிரிவு ஆட்டமும் அடங்கும். ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் இடம் பெறுவார்கள். விம்பிள்டன் போட்டிக்கு பிறகு வெளியிடப்படும் ஏடிபி தரவரிசை பட்டியலின் அடிப்படையில் 4 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மீதம் உள்ள இரு வீரர்களை அந்த அணியின் கேப்டன்கள் தேர்வு செய்ய உள்ளனர்.