

ஆன்ட்டிகுவா டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் கோலி இரட்டைச் சதம், அஸ்வின் 3-வது சதம் ஆகியவை நடந்தேறின, இந்தியா தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 566 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
3 கேட்ச்கள் விடப்பட்டன, இந்திய அணியினரை நெருக்காத மே.இ.தீவுகள், அதாவது தங்கள் பேட்ஸ்மென்கள் குறைந்த ஓவர்களையே எதிர்கொள்ளுமாறு முன் தீர்மானித்த ஒரு கேப்டன்சி, முடிவு, டெஸ்ட் போட்டிகளின் சுவாரசியத்தை குலைக்கும் முயற்சிகள்.
தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி தன் முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.
மேலும் 50 ரன்களை கோலி தனது ‘ராஜ’ கவர் டிரைவ்கள் மூலமே சேர்த்து இரட்டைச் சதம் அடித்தார். அயல்நாட்டில் இரட்டை சதம் எடுக்கும் முதல் இந்திய கேப்டன் விராட் கோலி என்ற சாதனையை நிகழ்த்தினார்.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முழுமுயற்சியுடன் வீசிய ஷனான் கேப்ரியல் பந்தில் ‘பால்வடியும் முக’ விக்கெட் கீப்பர் டவ்ரிச் கையில் வந்த கேட்சைக் கோட்டை விட்டார், அஸ்வின் அப்போது 43 ரன்கள். பிறகு அருமையான ஒரு பேக் ஃபுக் அரை கட், அரை டிரைவ் ஷாட்டில் பாயிண்ட் பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் அஸ்வின்.
ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நிறைய பந்துகளை அதன் பிறகு ஆடாமல் விட்டார் அஸ்வின். மே.இ.தீவுகள் ‘அட்டாக்’ செய்ய முயற்சி கூட செய்யவில்லை, ஒரு நேரத்தில் கோலியின் அனாயாச கவர் டிரைவ்களை தடுக்க வேகப்பந்து வீச்சாளர் வீசும்போதே ‘ஸ்வீப்பர்’ கவர் வைத்தார் ஹோல்டர். ஒன்றும் செய்ய முடியவில்லை மெதுவான பிட்ச், கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகள் எந்த லெந்தாக இருந்தாலும் கவர் டிரைவ் தவிர வேறு ஆடுவதில்லை என்று சபதம் எடுத்து ஆடிக் கொண்டிருந்தார். மாறுதலுக்காக ஒரேயொரு நேர் டிரைவ் ஆடினா, அவ்வப்போது பிஷூவின் ஷார்ட் பிட்ச்கள் மிட்விக்கெட்டுக்குப் பறந்தன. தனது முந்தைய அதிகபட்ச ஸ்கோரான 169 ரன்னை பவுண்டரியில் கடந்தார் கோலி. ஒட்டுமொத்த 375 நிமிட பேட்டிங்கில் ஒரேயொரு முறை பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு சென்றது.
பிட்ச் என்ன சுலபமாக இருந்தாலும் எந்த ஒரு இரட்டைச் சதமும் எளிதானதல்ல. சிங்கிள் எடுத்து இரட்டைச் சதம் எடுத்த விராட் கோலி, உணவு இடைவேளைக்குப் பிறகு 200 ரன்களில் கேப்ரியல் பந்தில் பிளேய்ட் ஆன் விதத்தில் பவுல்டு ஆனார்.
மெதுவான பிட்ச், அட்டாக் செய்ய விரும்பமில்லாத மே.இ.தீவுகள் கேப்டன்சி. அருகில் பீல்டர்களேயில்லை, அஸ்வின் இதனை தனது பொறுமையாகத் தகவமைத்துக் கொண்டார். அஸ்வினும் சஹாவும் 71 ரன்கள் சேர்த்தனர். சஹா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 40 ரன்களில் ஸ்டம்ப்டு முறையில் ஆட்டமிழந்தார்.
அஸ்வின், மிஸ்ரா இணைந்து மேலும் 51 ரன்கள். 253 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் சதம் 113 ரன்கள் எடுத்தார் அஸ்வின், பேக்புட் பஞ்ச்சில் மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்தது சதம் எடுத்த அஸ்வினின் அபாரமான ஷாட் கோலியின் கவர் டிரைவ்களுக்கு சவால் அளிக்கும் ஷாட்டாக அமைந்தது. மிஸ்ரா 68 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் என்று தன் பங்குக்கு கையை நனைத்தார். ஷமி 2 சிக்சர்களுடன் 17 ரன்களெடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். 161.5 ஓவர்களில் 566 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்த நிலையில் இந்தியா டிக்ளேர் செய்தது.
மே.இ.தீவுகள் பேட்டிங்கைத் தொடங்கிய போது கோலி பலவிதமான நெருக்குதல் களவியூகம் மேற்கொண்டார். 3 ஸ்லிப் கல்லி, பிறகு கூடுதல் கல்லி, பேக்வர்ட் ஷார்ட் லெக் என்று மாற்றி மாற்றி அமைத்தார், இதனால் மே.இ.தீவுகள் 16 ஓவர்களில் 31 ரன்களையே எடுக்க முடிந்தது. இந்த நெருக்கடிக்கு பணிந்த சந்திரிகா 15-வது ஓவரில் ஷமி பந்தை சஹாவிடம் எட்ஜ் செய்து வெளியேறினார். 2-ம் நாள் ஆட்டம் மைதான ரசிகர்களின் உறங்கி விழுந்த தலைகளுடன் முடிந்தது.