

பனிச்சறுக்கின்போது விபத்துக்குள்ளான முன்னாள் ஃபார்முலா 1 கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் முழுமையாக குணமடைய ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
படுத்த படுக்கையாக இருக்கும் ஷூமாக்கருக்கு சிகிச்சை அளித்து வரும் பிரான்ஸ் டாக்டர் ஜியான் பிரான்காய்ஸ் மேலும் கூறுகையில், “கடந்த டிசம்பரில் விபத்துக்குள்ளானதில் இருந்தே அவரை நன்றாக பார்த்துக் கொள்ளும் அவருடைய மனைவி கோரின்னாவை பாராட்டுகிறேன். ஷூமாக்கரின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர் குணமடைய நாம் காலஅவகாசம் கொடுக்க வேண்டும். அவர் குணமடைய ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம். அதுவரை அனைவரும் பொறுமையாக இருப்பது அவசியம். அவர் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பார்த்து அது தொடர்பாக அவருடைய குடும்பத்தினரிடம் தெரிவித்து வருகிறேன். அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது” என்றார்.
45 வயதான ஷூமாக்கர் கடந்த டிசம்பரில் பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது பனிப்பாறை யில் மோதி விபத்துக்குள்ளானர். அதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனால் 6 மாத காலம் கோமாவில் இருந்த ஷூமாக்கர் அதிலிருந்து மீண்டுவிட்டாலும், முழுமையாக குணமடையவில்லை. ஸ்விட்சர்லாந்தின் கிளான்டில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.