

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் புனேவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அவமானகரமாக தோல்வியை சந்தித்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, நாளை (சனி) 2-வது டெஸ்ட் போட்டியில் அந்த அணியுடன் மீண்டும் மோதுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
தொடரில் இந்திய அணி 0-1 என பின்தங்கியுள்ளதால் இந்த டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புனே டெஸ்ட்டில் இந்திய அணியை ஒட்டுமொத்தமாக ஓரங்கடியது ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி.
இந்திய மண்ணில் எந்தவொரு வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளரும் நிகழ்த்தாத சாதனையை ஸ்டீவ் ஓஃகீப் படைத்தார். இரு இன்னிங்ஸிலும் சேர்த்து அவர் 12 விக்கெட்களை கொத்தாக அள்ளியதால், இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
19 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இந்த தோல்வி எச்சரிக்கை மணியாக அமைந்தது. பெங்களூரு ஆடுகளம் தொடக்க நாட்களில் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி வலுவுடன் மீண்டு வருவதற்கு இதுவே சரியான தருணம்.
இந்திய அணியில் உள்ள இளம் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் விளையாடும் கலையை மீண்டும் நேர்த்தியாக கையாளும் பட்சத்தில் பதிலடி கொடுக்கலாம். சுழல் கூட்டணியான ஸ்டீவ் ஓஃகீப், நாதன் லயனும், வேக கூட்டணியான மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட்டும் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர்.
பிட்ச் விவகாரம்:
ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் பிட்ச் சற்றே பசுமையாக இருக்கிறது என்றாலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக பந்துகள் எழும்பும் வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் புனே பிட்சை விட பேட்டிங்குக்குச் சாதகமாக பிட்ச் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், பெங்களூரு ஆடுகளத்தில் மிட்செல் ஸ்டாக், ஐபிஎல் போட்டிகளில் அதிக அளவு விளையாடி உள்ளார். இந்த அனுபவத்தை பயன்படுத்தி அவர், ரிவர்ஸ் ஸ்விங்கை கையாளக்கூடும் இதனால் அவருக்கு ரிவர்ஸ் ஸ்விங் எடுக்காத வழியில் பிட்சின் நடுவில் ஈரப்பதம் இருக்குமாறு பராமரிக்கப்பட்டு வருவதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது, மேலும் அது குறிப்பிடுகையில், அஸ்வினுக்குத் தோதாக ஒரு இடத்தில் ஸ்பாட் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எது எப்படியோ குழிபிட்ச் மாயையிலிருந்து இந்திய அணியின் சிந்தனையை ஆஸ்திரேலியா அணியின் ஓகீஃப் மாற்றியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
பேட்டிங்கைப் பொறுத்தவரையில் இந்திய அணி அனைவருமே பெரிய அளவில் பங்களிப்பு செய்ய வேண்டியுள்ளது, விஜய், ரஹானே, புஜாரா முக்கியமாக பங்களிப்பு செய்ய வேண்டியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியிலும் உண்மையில் டாஸ் முக்கியப் பங்காற்றும் என்றே தெரிகிறது, பிட்சின் நடுவில் ஒரு இடத்தைத் தவிர மற்ற இடங்கள் வறண்டே காணப்படுகிறது.
கேட்ச்கள்:
இந்திய அணி முதல் டெஸ்ட்டில் 7 கேட்ச்களை தவறவிட்டது. அதிலும் சதம் அடித்த ஸ்மித்துக்கு மட்டும் 5 கேட்ச்களை இந்திய வீரர்கள் கோட்டை விட்டிருந்தனர். இந்த விஷயத்திலும், டிஆர்எஸ் முறையை பயன்படுத்துவதிலும் இந்திய அணி அதிகம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதற்கிடையே இந்த போட்டிக்கு மழை அச்சுறுத்தல் எழுந்துள்ளது. போட்டி நடைபெறும் பெரும்பாலான நாட்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடைசியாக கடந்த 2015-ல் இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மழை காரணமாக முதல் நாளுடன் கைவிடப்பட்டிருந்தது.
பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சிறிய அளவிலான மாற்றம் இருக்கக்கூடும். கோலி இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார். இந்த அனைத்து போட்டிகளிலும் ஒரே அணியுடன் அவர் விளையாடியது இல்லை. நிச்சயம் ஆட்டத்துக்கு ஆட்டம் அவர் மாற்றம் செய்துள்ளார்.
இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு கருண் நாயர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. சென்னை டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்தவர் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்படும் திறன் கொண்டவர். இதேபோல் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இடம்பெறக்கூடும். பேட்டிங்கை வலுப்படுத்தும் நோக்கில் கோலி, இந்த மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
அஜிங்க்ய ரஹானே நெருக்கடியுடன் களமிறங்குகிறார். கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் அவரது செயல்பாடு மோசமாகவே உள்ளது. கத்துக்குட்டியான வங்கதேச அணிக்கு எதிராக மட்டும் 82 ரன்கள் சேர்த்தார். அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை அவர் காப்பாற்ற சிறப்பாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும்.
ஆஸ்திரேலிய அணியில் இளம் தொடக்க வீரரான மேட் ரென்ஷா தனது உயரத்தை சிறப்பாக பயன்படுத்தி பேட் செய்வதால் வார்னர் மீண்டும் அதிரடிக்கு திரும்பக்கூடும்.
அணி விவரம்:
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, விருத்திமான் சாஹா, அபிநவ் முகுந்த், கருண் நாயர், அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீவ் யாதவ், ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா.
ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மேட் ரென்ஷா, டேவிட் வார்னர், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், மேத்யூ வேட், ஸ்டீவ் ஓஃகீப், ஜோஸ் ஹசல்வுட், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்வெப்சன், உஸ்மான் கவாஜா, ஜேக்சன் பேர்டு, அஷ்டன் அகர்.