

பஞ்சாபுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் கர்நாடகம் ஏறக்குறைய இறுதிச்சுற்றை உறுதி செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் 270 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய கர்நாடகம் 3-வது நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்திருந்தது. கே.கே. நாயர் 107, அமித் வர்மா 65 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
4-வது நாளான செவ்வாய்க்கிழமை போதிய வெளிச்சமின்மை காரணமாக 36.1 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இதில் சிறப்பாக விளையாடிய கர்நாடக வீரர் அமித் வர்மா சதமடித்தார். ஆட்டநேர முடிவில் கர்நாடகம் 5 விக்கெட் இழப்புக்கு 447 ரன்கள் குவித்துள்ளது. கே.கே.நாயர் 151, அமித் வர்மா 114 ரன்களுடன் களத்தில் உள்ளனர். கர்நாடகம் 177 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் ஒருநாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ளதால் முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் கர்நாடகம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகியிருக்கிறது.