

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நாதன் லயனின் சுழலில் 71.2 ஓவரில் 189 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்தி ரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 106 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. ஷான் மார்ஷ் 66, மேட் ரென்ஷா 60 ரன்கள் சேர்த்தனர். மேத்யூ வேட் 25, மிட்செல் ஸ்டார்க் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இவர்கள் இருவரும் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள். ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்ட மிழந்தார்.
எஞ்சிய 3 விக்கெட்களையும் ஜடேஜா விரைவாக வீழ்த்தினார். அவரது பந்து வீச்சில் மேத்யூ வேட் 40, நாதன் லயன் 0 ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் நடையைக் கட்ட கடைசி வீரராக களமிறங்கிய ஜோஸ் ஹசல்வுட் அடுத்த சில ஓவர்களில் 1 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 122.4 ஓவர்களில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 6, அஸ்வின் 2 விக்கெட் கைப்பற்றினர். 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல், அபிநவ் முகுந்த் ஜோடி நம்பிக்கை அளிக்கும் வகையில் நிதானமான தொடக்கம் கொடுத்தனர்.
மிட்செல் ஸ்டார்க் வீசிய 6-வது ஓவரில் முகுந்த் சிக்ஸர் அடித்தார். மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்தது. ராகுல் 20, முகுந்த் 16 ரன்களுடன் உணவு இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்து விளையாடினர்.
முகுந்த் மேற்கொண்டு ரன்கள் ஏதும் சேர்க்காத நிலையில் ஹசல்வுட் பந்தில் போல்டானார். அப்போது ஸ்கோர் 39 ஆக இருந்தது. இதையடுத்து சேதேஷ்வர் புஜாரா, ராகுலுடன் இணைந்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் 82 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் தனது 4-வது அரை சதத்தை அடித்தார்.
அவர் 51 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டீவ் ஓகீஃப் பந்தில் ஆட்டமிழந்தார். சிலிப் திசையில் ராகுல் அடித்த பந்தை ஸ்டீவ் ஸ்மித் பிரம்மிக்கும் வகையில் டைவ் செய்து பிடித்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.
ஹசல்வுட் வீசிய 35-வது ஓவரின் 2-வது பந்து கோலியின் காலில் பட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் முறையிட களநடுவர் உடனடியாக எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார். அதிர்ச்சியடைந்த கோலியும் இமைக்கும் நொடியில் மேல்முறையீடு செய்தார்.
இதில் பந்து பேட்டின் நுனியிலும், காலிலும் ஒரே நேரத்தில் பட்டது போன்று தெரிந்தது. வெகுநேரம் ஆய்வு செய்த 3-வது நடுவர், பந்து முதலில் மட்டையை தாக்கியதை உறுதி செய்ய வலுவான ஆதாரம் இல்லை எனக்கூறி களநடுவரின் முடிவவை உறுதி செய்தார். இதனால் கோலி 15 ரன்களில் வெளியேறினார்.
112 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்ததால் பேட்டிங் வியூகத்தை சற்று மாற்றும் வகையில் இடது கை பேட்ஸ்மேனான ஜடேஜா களமிறக்கப்பட்டார். ஆனால் இந்திய அணி மேற்கொண்டு 8 ரன்களை சேர்ப்பதற்குள் அடுத்த விக்கெட்டை இழந்தது. ஜடேஜா 12 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஹசல்வுட் பந்தில் போல்டானார்.
5-வது விக்கெட்டுக்கு ஜோடி யாக அஜிங்க்ய ரஹானே, புஜா ராவுடன் இணைந்தார். தேநீர் இடை வேளையில் இந்திய அணி 39 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப் புக்கு 122 ரன்கள் எடுத்தது. புஜாரா 34, ரஹானே 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இடை வேளைக்கு பின்னர் இரு வரும் பொறுமையாக விளையாடி னார்கள். புஜாரா 125 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் தனது 14-வது அரை சதத்தை அடித்தார். அவருக்கு உறுதுணையாக மறு முனையில் ரஹானே மிகச்சிறப்பாக செயல்பட்டார். சுமார் 34 ஓவர்கள் நங்கூரம் போல் செயல்பட்ட இந்த ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் கையாண்ட உத்திகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 72 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. புஜாரா 173 பந்து களில், 6 பவுண்டரிகளுடன் 79 ரன் களும், ரஹானே 105 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசல்வுட் 3, ஓகீஃப் ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளை யாடுகிறது.
தப்பித்த புஜாரா
புஜாரா 4 ரன்களில் இருந்த போது நாதன் லயன் பந்தில் தடுப்பாட்டம் மேற்கொண்டார். பந்து மட்டை விளிம்பில் பட்டு சிலிப் திசையில் நின்ற ஸ்டீவ் ஸ்மித்திடம் சென்றது. ஆனால் அவர் அதை சரியாக பிடிக்க தவறினார்.