

கடந்த 2 ஆண்டுகளாக, அதாவது, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா வருவதற்கு முன்பாக, பின் நடுவரிசை நிலைகள் பலவீனமாக இருந்ததால் தோனிக்கு சுமை அதிகமாக இருந்தது என்று இந்திய ஒருநாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் டிராபிக்காக இங்கிலாந்து வந்திறங்கிய போது விராட் கோலி கூறியதாவது:
பின் நடுவரிசை பேட்டிங் பலவீனமாக இருந்தது, எனவே அதை வலுப்படுத்துவதுதான் முதல் குறிக்கோளாக இருந்தது. இதனால் தோனிக்கு மிக அதிகமாக சுமை ஏற்பட்டது என்பதையும், தோனி சுதந்திரமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வது அவசியம் என்பதையும் உணர்ந்தோம்.
அவருடன் இணைந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுக்க பின் நடுவரிசையில் வலுவான வீரர்கள் இல்லை, இதனால் தோனி தன்னை பேட்டிங்கில் சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
ஆனால் கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இத்தகைய இடத்துக்கு வலு சேர்க்கும் நிலையில் இந்திய அணி வலுவாகத் திகழ்கிறது.
எனவே அந்த ஒரு இடம் முன்னேற்றம் தேவை என்று உணர்ந்து செய்தோம். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நாம் வென்றதற்கு இதுதான் காரணம்.
எங்கள் அணி சமபலத்துடன் உள்ளது, எனவே சாம்பியன்ஸ் டிராபியை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். பேட்டிங்கில் ஆழம் உள்ளது, பந்து வீச்சில் உண்மையில் நல்ல வேகப்பந்து வீச்சைக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.