Published : 07 Feb 2014 11:31 AM
Last Updated : 07 Feb 2014 11:31 AM

நியூஸிலாந்து ஆதிக்கம்: முதல் இன்னிங்ஸில் இந்தியா தடுமாற்றம்

நியூசிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்துள்ளது. நியூஸிலாந்தின் ஸ்கோரை விட 373 ரன்கள் பின்தங்கியுள்ளது இந்திய அணி.

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆடியது. களத்தில் இருந்த மெக்கல்லம், ஆண்டர்சன் இருவருமே அதிரடியான ஆட்டத்துடன் நாளை துவக்கினர். நேற்று 42 ரன்கள் எடுத்திருந்த கோரே ஆண்டர்சன் இன்று அரை சதத்தைக் கடந்தாலும், 77 ரன்களுக்கு இஷாந்த் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறு முனையில் கேப்டன் மெக்கல்லம் மட்டும் நிலைத்தார்.

ரவீந்த்ர ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 114-வது ஓவரில், ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்ததன் மூலம் தனது இரட்டைச் சதத்தைக் கடந்தார். 280 பந்துகளில் 28 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அவர் இந்தியாவுக்கு எதிரான தனது இரண்டாவது இரட்டைச் சதத்தைக் கடந்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு 503 ரன்களுக்கு நியூஸி. அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மெக்கல்லம் 224 ரன்களுக்கு இஷாந்த் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி மீண்டும் தடுமாற்றம்

தனது முதல் இன்னிங்க்ஸைத் துவங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே தடுமாற்றமாக இருந்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஷிகர் தவான் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் புஜாராவும் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

இந்தத் தொடரில் இந்தியத் தரப்பில் தொடர்ந்து ரன்கள் சேர்த்து வரும் கோலி, முரளி விஜய்யுடன் கைகோர்த்தார். ஆனால் 6-வது ஓவரில் சவுத்தியின் பந்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து விராட் கோலி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ரோஹித் சர்மாவும், விஜய்யுடன் இணைந்து நிலைத்து ஆட முயற்சி செய்தார்.

இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 20-வது ஓவரில் வாக்னரின் பந்தில் 26 ரன்களுக்கு முரளி விஜய் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரஹானே களமிறங்கினார். இவரும், சர்மாவும் சேர்ந்து நியூஸி. அணியின் பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்கத் தொடங்கினர். 74 பந்துகளில் ரோஹித் சர்மா தனது அரை சதத்தைக் கடந்தார். அணியின் ஸ்கோர் 125 ரன்களாக ஆக இருந்த போது, 39-வது ஓவரில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

இன்றைய நாளில் இன்னும் 17 ஓவர்கள் மிச்சமிருந்த நிலையில் ஆட்டம் முடிந்ததாக அம்பையர்கள் அறிவித்தனர். நாளைய ஆட்டம் சீக்கிரமாக ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இன்னும் 174 ரன்கள் எடுத்தால் மட்டுமே ஃபாலோ ஆனைத் தவிர்க்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி உள்ளது. நாளைய ஆட்டம் இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கத் தொடரில் தடுமாறியதைப் போலவே, இந்திய அணி மீண்டும் நியூஸிலாந்தில் தடுமாறி வருகிறது. டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா, வெளிநாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறது. அணியின் துவக்க வீரர்களும், பந்து வீச்சாளர்களும் சூழலுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளத் தவறுவதே தொடர் தோல்விகளுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

150 விக்கெட் எடுத்து இஷாந்த் சர்மா சாதனை

இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர் ரூதர்போர்டின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் 150 விக்கெட்டுகளை எடுத்த 11-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை இஷாந்த் சர்மா படைத்தார். அதோடு, இன்றைய போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மெக்கல்லம் அடித்த இரட்டைச் சதம் மற்றும் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணியின் தடுமாற்றம் இரண்டும் இஷாந்த் சர்மாவின் சாதனையை இருட்டடிப்பு செய்தன.

தனது 54-வது டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா இச்சாதனையை எட்டியுள்ளார். இப்போது இந்திய அணியிலுள்ள பந்து வீச்சாளர்களில் ஜாகீர் கான் மட்டுமே 150 விக்கெட்டுகளை எட்டியுள்ளார். ஜாகீர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 302 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவருக்கு அடுத்ததாக இஷாந்த் சர்மா 150 விக்கெட்டுகளை கடந்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை எடுத்து, அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சர்வதேச அளவில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x