

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரமவைரியான பாகிஸ்தானை 4-ம் தேதி எதிர்த்து விளையாடுகிறது. 8-ம் தேதி இலங்கையையும், 11-ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும் இந்திய அணி சந்திக்கிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று இரவு மும்பையில் இருந்து இங்கிலாந் துக்கு புறப்பட்டு சென்றது.
முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர் களை சந்தித்தார். அப்போது, தற்போதைய அரசியல் சூழ் நிலையில் பாகிஸ்தானுடன் விளை யாடுவது சிறந்த விஷயம்தானா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த கோலி, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். நீங்கள் உங்களது சொந்த மனநிலையுடன் இங்கு வந்துள்ளீர்கள். அனைவரையும் மதிக்க வேண்டும். ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக எதிர்முனையில் இருக்கும் நமது பங்குதாரர் குறித்து அதிகம் நினைக்க முடியாது.
இது விளையாட்டில் மட்டும் தான். இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போதுமே ரசிகர் களுக்கு உற்சாகமாக இருக்கும். அவர்களுக்கு இது வேறுபட்டதாக இருக்கும். எங்களை பொறுத்த வரையில் இது ஒரு கிரிக்கெட் ஆட்டம். எங்கள் தலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அது அப்படியேதான் இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் முதல்முறையாக ஒன்றும் விளையாடவில்லை. இதனால் கூடுதல் ஊக்கம் தேவை இருக்காது” என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் பாகிஸ்தான் இரு ஆட்டத்திலும், இந்தியா ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி 2013-ம் ஆண்டு இந்திய அணி பட்டம் வென்ற தொடரில் கிடைத்ததாகும்.
சச்சின் திரைப்படம்
சாம்பியன் டிராபி தொடருக்காக இந்திய அணி நேற்று இரவு மும்பையில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. முன்னதாக இந்திய அணி வீரர்கள், சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற திரைப்படத்தை பார்வையிட்டனர்.
மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள திரையரங்கில் இந்த படத்தை இந்திய அணி வீரர்களுக்காக பிரத்யேகமாக திரையிட்டார் சச்சின். இங்கிலாந்தின் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கி உள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். வரும் 26-ம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் திரையிடப்பட உள்ளது.