

துபாயில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாளான இன்று பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்ஸில் 454 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
யூனிஸ் கான் கடினமான நேரத்தில் இறங்கி 106 ரன்கள் எடுத்து தனது அனுபவத்தைக் காட்ட, கடைசியில் இறங்கிய விக்கெட் கீப்பர் சரபராஸ் அகமட் அதிரடியாக விளையாடி, 80 பந்துகளில் சதம் எடுத்தார்.
பாகிஸ்தானில் குறைந்த பந்துகளில் டெஸ்ட் சதம் எடுத்த சாதனையை வைத்திருப்பவர் முன்னாள் தொடக்க வீரர் மஜீத் கான் ஆவார். இவர் 74 பந்துகளில் சதம் எடுத்துள்ளார். பிறகு ஷாகித் அப்ரீடி இருமுறை 78 பந்துகளில் சதம் கண்டுள்ளார். இப்போது சர்பராஸ் அகமட்.
வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் வீசிய பந்தை ஸ்லிப் திசையில் பவுண்டரி அடித்து தனது 14-வது பவுண்டரியில் 80 பந்துகளில் சதம் கண்டார் சர்பராஸ். தேநீர் இடைவேளைக்கு சற்று முன் நேதன் லயன் பந்தில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார் சர்பராஸ். அவர் ஆட்டமிழந்த பிறகு பாகிஸ்தான் ஒரு ரன்னைக் கூட சேர்க்க முடியாமல் 454 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சுல்பிகர் பாபர் என்ற வீரர் காயம் காரணமாக களமிறங்கவில்லை.
இன்று 219/4 என்று தொடங்கியது பாகிஸ்தான். 4 மணி நேர ஆட்டத்தில் 235 ரன்களை விளாசியது. கேப்டன் மிஸ்பா உல் ஹக், ஆசாத் ஷபிக் ஆகியோர் இணைந்து 93 ரன்கள் சேர்த்தனர். பிறகு ஷபிக்-சர்பராஸ் ஜோடி 6-வது விக்கெட்டுக்காக 124 ரன்கள் சேர்த்தனர். ஷபிக் 89 ரன்களிலும் கேப்டன் மிஸ்பா 69 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆசாத் ஷபிக் இன்று காலை 2-வது ஓவரில் அவுட் ஆக வேண்டியது, ஆனால் பேட்-கால்காப்பு கேட்சை அலெக்ஸ் டூலன் கோட்டை விட்டார். நேதன் லயன் ஏமாற்றமடைந்தார்.
இன்று 34 ரன்களுடன் தொடங்கிய மிஸ்பா, மிட்செல் ஜான்சன் வீசிய அசாத்திய பவுன்சர்களை காமெடியாக தவிர்த்தாலும் விக்கெட்டைக் கொடுக்காமல் நின்றார். தனது கடைசி 9 இன்னிங்ஸ்களில் மிஸ்பா எடுக்கும் முதல் அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அரைசதம் கண்டவுடன் லயன் பந்தை லாங் ஆனில் சிக்சருக்கு அடித்தார். ஸ்மித்தையும் ஒரு சிக்ஸ் அடித்தார்.
நேற்று அசர் அலி(53) யூனிஸ் கான் (106) பாகிஸ்தானை 7/2 என்ற சரிவு அபாயத்திலிருந்து மீட்டனர்.
பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் வேகப்பந்து வீச்சில் 72 ஓவர்களில் 133 ரன்களையே அடிக்க முடிந்தது. மிட்செல் ஜான்சன் 31 ஓவர்கள் 18 மைடன், 39 ரன்கள் 3 விக்கெட்டுகள். சிடில், மிட்செல் மார்ஷ் அனைவரும் சிக்கனமாக வீசினர்.
454 ரன்களில் 133 ரன்களை வேகப்பந்து வீச்சில் எடுத்த பாகிஸ்தான் மீதி ரன்களை லயன், ஸ்மித், ஓ’கீஃப் ஆகியோரது ஜெண்டில் ஸ்பின் பந்து வீச்சிலேயே எடுத்தது குறிப்பிடத்தக்கது.