

2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் வென்ற வெண்கலப்பதக்கம், வெள்ளிப் பதக்கமாக உயர்த்தப்படுகிறது.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் 60 கிலோ உடல் எடைப்பிரிவு ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் வென்ற வெண்கலப் பதக்கம், வெள்ளிப் பதக்கமாக உயர்த்தப்படுகிறது.
காரணம், அந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற, 2013-ல் விபத்தில் மரணமடைந்த, ரஷ்ய வீரர் பெசிக் குடுகோவ் என்ற வீரர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை எடுத்துக் கொண்டதாக நிரூபணம் ஆனதால் அவரது வெள்ளிப் பதக்கம் பறிக்கப்படுகிறது. இதனையடுத்து இந்திய வீரர் யோகேஷ்வரின் வெண்கலப் பதக்கம் வெள்ளிப் பதக்கமாக உயர்த்தப்படுகிறது .
அகால மரணமடைந்த ரஷ்ய வீரர் பெசிக் குடுகோவ், யோகேஷ்வரை லண்டன் ஒலிம்பிக்கில் வீழ்த்தினார். அவர் 4 முறை உலக சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவலை தங்களுக்கு உறுதி செய்ததாக கூறிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, இது குறித்த எழுத்துபூர்வ உறுதிக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர்.
இதன் மூலம் வெள்ளி வென்ற 2-வது இந்திய மல்யுத்த வீரரானார் யோகேஷ்வர் தத், ஏற்கெனவே சுஷில் குமார் வெள்ளி வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற 5-வது தனிநபர் வீரரானார் யோகேஷ்வர் தத்.
யோகேஷ்வர் பதக்க நிலை உயர்த்தப்பட்டதால், அமெரிக்க வீரர் கோல்மன் ஸ்காட் தற்போது 2012 மல்யுத்த வெண்கலப் பதக்க வீரராக உயர்வடைந்துள்ளார்.