

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் தனது மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தான் தலையிடுவதற்கு எதுவும் இல்லை என்றும், சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பனை மும்பை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, குருநாத் மெய்யப்பன் மீது மும்பை காவல்துறையினர் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன், “இது குருநாத் மெய்யப்பன் அணுக வேண்டிய விஷயம். அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால், அவர் அதை எதிர்கொள்ள வேண்டும். அவர் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதால், அணியுடன் தொடர்பில் இல்லை. அவர்தான் தன் நிலையைப் பார்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, நான் செய்வதற்கு எதுவுமே இல்லை” என்றார்.
மேலும், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பிசிசிஐ தலைவர் பதவிக்கான தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடப்போவதாக அவர் குறிப்பிட்டார்.