Published : 30 Jun 2017 03:11 PM
Last Updated : 30 Jun 2017 03:11 PM

மெக்சிகோவின் பலவீனமான தடுப்பு உத்தி: 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் ஜெர்மனி

மெக்சிகோவின் பலவீனமான தடுப்பு உத்தியை சரியாகப் பயன்படுத்திய ஜெர்மனி கான்பெடரேஷன் கோப்பை அரையிறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியில் சிலி அணியைச் சந்திக்கிறது.

லியான் கோரெட்ஸ்கா முதல் 10 நிமிடங்களில் அடித்த 2 கோல்கள் மெக்சிகோவின் முயற்சிகளுக்கு ஆணியடித்தது.

ரஷ்யாவில் உள்ள சோச்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனுபவமற்ற அணியாக ஜெர்மனி இருந்தாலும் மெக்சிகோவின் தடுப்பாட்ட ஓட்டைகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. கோல் அடித்த ஜெர்மனியின் 3 வீரர்கள் இந்தத் தொடரில்தான் அறிமுகமாகிய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் தொடங்கிய 6 மற்றும் 8-வது நிமிடங்களில் லியான் கோரெட்ஸ்கா 2 கோல்களைத் திணிக்க, இரண்டாவது பாதியில் டிமோ வெர்னர், ஆமின் யூனிஸ் மேலும் 2 கோல்களை அடித்தனர்.

பார்ப்பதற்கு ஜெர்மனி எளிதாக வென்றது போல் தெரிந்தாலும் மெக்சிகோ அணி ஜெர்மனி கோலை நோக்கி 25 ஷாட்களை அடித்தது, ஆனால் 89-வது நிமிடத்தில்தான் மெக்சிகோ வீரர் மார்க்கோ ஃபேபியன் நீண்ட தூரத்திலிருந்து வளைவான ஒரு ஷாட்டில் மிக அற்புதமான கோலை அடித்தார். இதுவே மெக்சிகோவின் ஒரேகோலாக அமைந்தது. ஜெர்மனி கோல் கீப்பர் மார்க் ஆந்த்ரே டெர் ஸ்டீஜனுக்கு சில நெருக்கடி தருணங்களை மெக்சிகோ அணி கொடுத்தது.

3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஞாயிறன்று மெக்சிகோ அணி போர்ச்சுக்கலை சந்திக்கிறது.

ஆட்டத்தின் தொடக்க நிமிடங்களில் மெக்சிகோ கேப்டன் ஹெக்டர் மொரீனோ தலையால் முட்டிய ஷாட் தவறாக முடிய கோரெட்ஸ்கா கோலைப் பதம் பார்த்தார். பாதி தூரத்திலிருந்து பந்தைப் பெற்ற கோரெட்ஸ்கா பந்தை பெஞ்சமின் ஹென்றிக்ஸுக்கு வலது புறம் பாஸ் செய்து பிறகு அவரிடமிருந்தே பந்தைப் பெற கோரெட்ஸ்கா அபாரமாக ஓடினார், பிறகு 20 அடியிலிருந்து அற்புதமான கோலை அடித்தார்.

அதன் பிறகும் மெக்சிகோ அணி திரண்டெழுவதற்குள் வெர்னரின் அபார முயற்சியால் பந்தைப் பெற்ற கோரெட்ஸ்கா 2-வது கோலை அடித்தார். மெக்சிகோ கோல் கீப்பர் கில்லர்மோ ஓச்சா கால் வழியாகவே இந்த கோல் சென்றது. அதன் பிறகு வெர்னரின் ஷாட் ஒன்று நேராக மெக்சிகோ கோல் கீப்பர் ஓச்சாவிடம் சென்றது.

பிறகு ஜெர்மனி கோல் கீப்பர் கியோவனி சாண்டோஸ் மற்றும் ஜோனதன் டாஸ் சாண்டோஸ் கோல் முயற்சிகளை தடுத்தார்.

அதன் பிறகும் கூட மெக்சிகோவின் அனுபவ நட்சத்திர வீரர் ஜேவியர் ஹெர்னாண்டஸுக்கு ஒரு அருமையான கோல் வாய்ப்பு கிடைத்தது, இவரும் ஜெர்மனி கோல் கீப்பரும் மட்டுமே இருந்தனர், ஆனால் ஹெர்னாண்டஸின் ஷாட் மேலே சென்றது, அருமையான கோல் வாய்ப்பு பறிபோனது.

ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் கேப்டன் ஜூலியன் டிராக்ஸ்லர், ஜொனாஸ் ஹெக்டர் இணைந்து ஒரு அருமையான கூட்டணி அமைத்து பந்தை எடுத்துச் சென்று மெக்சிகோ பகுதியில் யாருடைய தடுப்பும் இல்லாமல் சுதந்திரமாக இருந்த வெர்னருக்குப் பந்து செல்ல காலியான கோலில் 3-வது கோல் விழுந்தது. கடைசியில் யூனிஸ் 4-வது கோலை அடித்தார். மெக்சிகோ வெளியேற ஜெர்மனி இறுதிக்குள் நுழைந்து வரும் ஞாயிறன்று சிலியை எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x