

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆரோன் பின்ச் தலைமையில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் அனைவரும் இந்திய டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்ற நிலையில் டி 20 ஆட்டத்தில் மைக்கேல் லிங்கர், பில்லி ஸ்டேன்லேக், ஆஷ்டன் டர்னர் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
இலங்கை அணி உபுல் தரங்கா தலைமையில் விளையாடியது. அந்த அணியில் அறிமுக வீரராக விகும் சஞ்ஜெயா இடம் பெற்றார். மேலும் வேகப் பந்து வீச்சாளரான மலிங்கா ஒரு வருட காலத்துக்கு பிறகு மீண்டும் களமிறங்கினார். டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பின்ச் 43, லிங்கர் 38, டிரெவிஸ் ஹெட் 31 ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் மலிங்கா 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
169 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணிக்கு ஆரம்பமே சற்று அதிர்ச்சியாக இருந்தது. உபுல் தரங்கா ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார். எனினும் டிக்வெலா 30, முனவீரா 44 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அடுத்து வந்த குணரத்னே 34 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
பரபரப்பு
17 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 18-வது ஓவரின் முதல் பந்தில் குணரத்னே ஸ்டெம்பிங் ஆனார். அவர் 52 ரன்கள் சேர்த்தார். இதே ஓவரின் 3-வது பந்தில் வர்தனா (15) ஆட்டமிழக்க இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
எனினும் கபுகேதரா, பிரசன்னா ஜோடி நிதானமாக விளையாடியது. ஆன்ட்ரூ டை வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரன் சேர்க்கப்படவில்லை. அடுத்த 3 பந்துகளிலும் தலா ஒரு ரன்கள் எடுக்கப்பட்டது.
4-வது பந்தில் ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கில் சிறிது சொதப்ப இதை பயன்படுத்தி மின்னல் வேகத்தில் இலங்கை வீரர்கள் இரு ரன்கள் எடுத்தனர். இதனால் ஸ்கோர் சமன் ஆனது. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் கபுகேதரா பவுண்டரி விளாச இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கபுகேதரா 15, பிரசன்னா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை நடைபெறுகிறது.