

இந்தியாவை இந்திய பிட்ச்களில் வீழ்த்துவதற்கு ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு, ஆஸ்திரேலியா நிச்சயம் திணறவே செய்யும் என்று ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்கை ஸ்போர்ட்ஸ் வானொலியில் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
ஆஸ்திரேலியா இந்தியாவில் திணறும் என்றே நான் நினைக்கிறேன். முன்னெப்போதையும் விட தங்களுக்குச் சாதகமாக பிட்ச்களை அவர்கள் தயாரிப்பார்கள். இலங்கைத் தொடரில் நடந்ததை பார்க்கும் போது, ஒவ்வொரு முறை துணைக்கண்டம் செல்லும் போதெல்லாம் முதல் நாளிலிருந்தே பந்துகள் கடுமையாக ஸ்பின் ஆகி திரும்புவதைத்தான் பார்த்து வருகிறோம்.
இலங்கை தொடர் போல் அல்லாமல் இந்தியாவில் கொஞ்சம் கூடுதலாகப் போராடி சவால் அளித்தால் தோற்றால் கூட பெரிய விவகாரம் ஒன்றுமில்லை.
ஆஸ்திரேலியா அணிக்கு இது கற்றுக்கொள்ளும் கட்டமாகும். ஆஸ்திரேலிய வழியில், ஆஸ்திரேலிய பாணியில் ஆடுவதிலிருந்து இந்திய நிலைமைகளுக்கு மாற்றி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.
வார்னர் நினைத்தால் இந்தியாவை கட்டுப்படுத்த முடியும்: இயன் சாப்பல்
இந்தியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு ஏதாவது வாய்ப்புகள் உண்டானால் அது டேவிட் வார்னர் பேட்டிங்கினால் மட்டுமே சாத்தியமாகும். இலங்கை, இந்தியாவில் வார்னர் 26 ரன்களுக்கும் கீழ் சராசரி வைத்துள்ளார்.
எனவே இந்தியாவில் வார்னர் அதிரடி ஆட்டம் ஆடினால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு. அவர் ஆடினால் அவரையொட்டி மற்ற வீரர்களும் ஆட முடியும், மேலும் இந்திய ஸ்பின்னர்கள் மேலும் சில விஷயங்களை யோசிக்க வைப்பார் வார்னர். ஏனெனில் அவர் பிட்சில் நின்றால் நிச்சயம் இந்திய ஸ்பின்னர்களை ஆக்ரோஷமாக அடித்து ஆடவே செய்வார்.
தாக்குதல் ஆட்டத்தை இந்திய பவுலர்கள் தங்கள் சொந்த மண்ணில் அதிகம் சந்தித்ததில்லை.
இவ்வாறு கூறினார் இயன் சாப்பல்.