

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை எடுத்து போராடி வருகிறது.
ஆஸ்திரேலியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த இரு அணிகளிடையே ஏற்கெனவே நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நேற்று தொடங்கியது.
டாஸில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹால்டர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஹோப்பின் விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இருப்பினும் கே.பிராத்வைட் - டேரன் பிராவோ இருவரும் 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணியை மீட்க முயன்றனர். அணியின் ஸ்கோர் 104 ஆக இருந்தபோது பிராவோ (33 ரன்கள்) அவுட் ஆக மேற்கிந்திய தீவுகள் அணியின் சரிவு தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கே.பிராத்வைட் மட்டும் ஓரளவு நிதானமாக ஆடி மேற்கிந்திய தீவுகள் அணியை மீட்க போராடினார். 85 ரன்களை குவித்த அவரது விக்கெட்டை நாதன் லியான் கைப்பற்றினார். இது ஆஸ்திரேலிய மண்ணில் லியான் எடுக்கும் 100-வது விக்கெட் ஆகும்.
நேற்றைய ஆட்டத்தின்போது அடிக்கடி மழை குறுக்கிட்டதால் 75 ஓவர்களை மட்டுமே வீச முடிந் தது. ஆட்டத்தின் இறுதியில் மேற் கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை எடுத் திருந்தது. தினேஷ் ராம்தின் 23 ரன்களுடனும், சி.பிராத்வைட் 35 ரன்களுடனும் ஆட்டம் இழக் காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணிக்காக நேற்று நாதன் லியான் 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஹசல்வுட், பாட்டின்சன், ஓ கீஃப் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.