

புனே தோல்வியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அடுத்த டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவதே முக்கியம் என்று கூறும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, கருண் நாயர் நிலை பற்றி வருத்தத்துடன் கருத்து தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அனில் கும்ப்ளே கூறியதாவது:
நடந்ததை நினைப்பவனல்ல நான். வரும் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். அதுவும் ஒரு பயிற்சியாளராக வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதையே எதிர்நோக்குகிறேன்.
ஆம், இது ஒரு டெஸ்ட் போட்டி எங்களுக்கு சாதகமாக அமையவில்லை ,ஆஸ்திரேலியர்கள் எங்களை விட நிலைமைகளை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
கருண் நாயர் முச்சதம் அடித்த பிறகே அணியில் தேர்வு செய்யப்பட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானதே. அணிச்சேர்க்கை அவ்வாறான சூழலை ஏற்படுத்திவிட்டது.
பதிலி வீரராக நுழைந்து முச்சதம் அடித்த ஒருவரை நாம் கொண்டிருப்பது நல்லதுதான், இன்னமும் பெங்களூரு டெஸ்ட் போட்டிக்கான அணிச்சேர்க்கையை முடிவு செய்யவில்லை. நாங்கள் இன்னமும் அதனை விவாதிக்கவில்லை. 16 வீரர்களுடன் நல்ல உடல்தகுதியுடன் உள்ளனர்.
இவ்வாறு கூறினார் கும்ப்ளே.