

20-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நேற்று தொடங்கியது. தெற்கு ஆசியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி தொடரான இந்த போட்டி வரும் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த போட்டியில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 4ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, 12வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், பிரான்ஸின் பெனோய்ட் பைர் ஸ்பெயினின் ராபர்டோ பாடிஸ்டா குல்லேர்மோ கார்ஸியா, லக்ஸர்பர்க்கின் ஜிலெச் முல்லர், கனடாவின் வாசெக் போப்ஸில், குரோஷியாவின் போர்னா கோரிச், இந்தியாவின் சோம் தேவ் வர்மன், ராம்குமார் ராமநாதன் உள்ளிட்ட 32 வீரர்கள் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 73வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்மேக்ரோ, குரோஷியாவின் அன்டி பாவிக்கிடம் 6-3, 5-7, 6-7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். 449வது இடத்தில் உள்ள பாவிக் சுமார் 2 மணி நேரம் 4 நிமிடங்கள் நெருக்கடி கொடுத்து இந்த வெற்றியை பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 92வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் மில்மான் 6-7, 6-4, 7-6 என்ற செட் கணக்கில், 91ம் நிலை வீரரான ரஷ்யாவின் டான்ஸ்கோயை தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் நடைபெற்றது.