

பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ப்ளே விலகியதற்குக் காரணமின்றி விராட் கோலி மீது அனைவரும் விமர்சனம் வைக்கின்றனர் என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.
“விராட் கோலி மீது அனாவசியமாக விமர்சனம் வைக்கின்றனர். இந்த விவாதம் முற்றுப்பெற வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வார் விராட் கோலி. கேப்டன் தாக்கப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த காலங்களிலும் இவ்வாறு நடந்துள்ளது.
பிசிசிஐ-யின் முந்தைய நிர்வாகம் இத்தகைய சூழல்களை திறம்பட கையாளும். கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டிக்கான பெருமையை நாம் சேர்ப்பித்துத்தான் ஆகவேண்டும், ஓராண்டு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது ஏனெனில் பிரச்சினை எழுந்தால் மாற்றம் கொண்டு வரலாம் என்பதற்காகவே.
பிசிசிஐயின் தற்போதைய நிர்வாகிகள் நிறைய பதில் கூற வேண்டியுள்ளது. நாங்கள் இத்தகைய விவகாரங்களைக் கசிய அனுமதிக்க மாட்டோம். கும்ப்ளே ஒப்பந்த காலத்தில் முதல்7-8 மாதங்கள், அதாவது நாங்கள் நிர்வாகத்தில் இருந்த போது இத்தகைய பிரச்சினைகள் இல்லை. எனவே இப்போது வாரியத்தை நடத்தி வருபவர்களிடத்தில் கேள்விகளை எழுப்ப வேண்டும்” என்றார் அனுராக் தாக்குர்.