

தந்தையை இழந்து 4 நாட்களே ஆன நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் ஆடவந்து அரைசதம் விளாசிய ரிஷப் பந்த்தை சக வீரர்கள் பாராட்டினர்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணி களுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்தது. இப்போட்டி யில் முதலில் ஆடிய பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை அடித்தது. அந்த அணியில் கேதார் ஜாதவ், அதிகபட்சமாக 69 ரன்களைக் குவித்தார். அடுத்து ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியில் டெல்லி அணிக் காக ஆடிய 19 வயது இளம் வீர ரான ரிஷப் பந்த், 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர் களுடன் 56 ரன்களைக் குவித்தார். வெளியில் இருந்து பார்த்த ரசிகர்களுக்கு இது வெறும் அதிரடி ஆட்டமாக தெரிந்திருக்கலாம். ஆனால் டெல்லி அணிக்காக ஆடிய மற்ற வீரர்களுக்கு மட்டுமே எத்தகைய உணர்ச்சிப் போராட்டத்துக்கு நடுவில் பந்த், இந்த அதிரடி ஆட்டத்தை நிகழ்த்தியுள்ளார் என்பது தெரியும்.
ரிஷப் பந்த்தின் தந்தையான ராஜேந்திர பந்த், கடந்த செவ்வாய் கிழமையன்று உடல்நலக் குறை வால் காலமானார். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக களம் இறங்க வேண்டியுள்ளதால் வியாழனன்று அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்துவிட்டு அணியில் சேர்ந்தார் ரிஷப் பந்த். தனது முன்னேற்றத்தில் பெரும் அக்கறை கொண்ட தந்தையின் மறைவால் ஏற்பட்ட சோகத்தையும் கடந்து பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பந்த் அரைசதம் அடித்துள்ளார்.
18 ஆண்டுகளுக்கு முன் தந்தையை இழந்த நிலையிலும் உலகக் கோப்பை போட்டியில் கென்யாவுக்கு எதிராக களம் இறங்கிய சச்சின் டெண்டுல்கர், அப்போட்டியில் சதம் அடித்தார். இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் தனது தந்தை மரண மடைந்ததற்கு அடுத்த நாளே ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்காக ஆடிய விராட் கோலி 97 ரன்களைக் குவித்தார். அந்த இரு வீரர்களின் மன உறுதிக்கு நிகராக ரிஷப் பந்த்தின் இந்த ஆட்டத்தைக் காண்பதாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் வீரர்கள் தெரிவித்தனர்.