Published : 26 Jan 2014 06:11 PM
Last Updated : 26 Jan 2014 06:11 PM

வாவ்ரிங்காவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்: முதல்நிலை வீரரான நடாலை வீழ்த்தினார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

சென்னை ஓபனை வென்று இந்த சீசனை வெற்றிகரமாகத் தொடங்கிய வாவ்ரிங்கா, ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனையும் வென்றுள்ளார்.

மெல்போர்னில் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் உலகின் 8-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தினார்.

2 மணி நேரம் 21 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இரு செட்களை கைப்பற்றி போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார் வாவ்ரிங்கா. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சினையால் அவதிப்பட்ட நடால் மைதானத்தில் சிகிச்சை எடுத்தார். இதனால் அவர் பாதியிலேயே விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அதிலிருந்து மீண்ட நடால், 3-வது செட்டைக் கைப்பற்றி போட்டியை 4-வது செட்டுக்கு இழுத்துச் சென்றார். 4--வது செட்டில் சிறப்பாக ஆடிய வாவ்ரிங்கா அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இதற்கு முன்னர் நடாலுடன் 12 போட்டிகளில் மோதியிருந்த வாவ்ரிங்கா, அதில் ஒன்றில்கூட வெற்றி பெற்றதில்லை. இப்போது நடாலுக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்த வாவ்ரிங்காவுக்கு ஆஸ்திரேலிய ஓபன் பட்டமும் கிடைத்திருக்கிறது.

வெற்றி குறித்துப் பேசிய வாவ்ரிங்கா, “என்னைப் பொறுத்தவரையில் இதுதான் தலைசிறந்த கிராண்ட்ஸ்லாம் போட்டி. இங்கு மிகவும் ரசித்து விளையாடுகிறேன். கடந்த ஓர் ஆண்டில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது கனவா அல்லது நனவா என தெரியவில்லை” என்றார்.

தனது 36-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார் வாவ்ரிங்கா. இதற்கு முன்னர் 35 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடியிருந்தபோதும், ஒருமுறைகூட அவர் இறுதிச்சுற்றுக்குகூட முன்னேறியது கிடையாது. குரேஷியாவின் கோரன் இவானிசெவிச் 48 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடிய பிறகு தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 2001 விம்பிள்டனில் வென்றார். அதன்பிறகு இப்போது வாவ்ரிங்கா தனது 36-வது போட்டியில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருக்கிறார்.

தோல்விக்குப் பிறகு பேசிய நடால், “ஸ்டானிஸுக்கு நன்றி. நீங்கள் வெற்றிக்கு தகுதியானவர். உங்களின் இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. இன்று உங்களுக்கு எதிரான ஆட்டத்தில் எனக்கு அதிர்ஷ்டமில்லை. ஆனாலும் நீங்கள் வெற்றிக்கு தகுதியானவர். எனது அணியினருக்கும் (பயிற்சியாளர்கள்) நன்றி. அவர்கள் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நிற்க முடியாது. நான் கடுமையாகப் போராடியபோதும் தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை. அதற்காக எனது அணியினரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எனது உணர்ச்சிபூர்வமான போட்டிகளில் இந்தப் போட்டியும் ஒன்று” என்றார்.

1993-ல் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் செர்ஜி புருகேரா, அப்போதைய முதல்நிலை வீரரான அமெரிக்காவின் ஜிம் கூரியரைத் தோற்கடித்து சாம்பியன் ஆனார். அதன்பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்நிலை வீரரை இப்போது வாவ்ரிங்கா வீழ்த்தியிருக்கிறார்.

இந்த முறை 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நடால், அதிர்ச்சி தோல்வியைத் தழுவியதோடு, காயத்தாலும் அவதிப்பட்டார். ஆஸ்திரேலிய ஓபனுக்கும், நடாலுக்கும் எப்போதுமே காயம் ஒரு பிரச்சினையாக இருந்துள்ளது.

காயம் காரணமாக 2006, 2013 ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் பங்கேற்காத நடால், 2010-ல் நடைபெற்ற காலிறுதியில் பாதியிலேயே வெளியேறினார். 2011-ல் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட நடால், 4-வது சுற்றில் சகநாட்டவரான டேவிட் ஃபெரரிடம் தோல்வி கண்டார்.-ஏ.எப்.பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x