

கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் வலுவான உருகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசூலா அணி வீழ்த்தியது. இதன் மூலம் வெனிசூலா காலிறுதி வாய்ப்பைப் பெற்றது.
உருகுவே அணியின் காலிறுதி வாய்ப்பு முடிந்தது. ஏனெனில் மெக்சிகோ-ஜமைக்கா போட்டி டிரா ஆனாலே மெக்சிகோ அணி காலிறுதிக்குத் தகுதி பெற்று விடும், ஆனால் மெக்சிகோ அணி 2-0 என்று ஜமைக்காவை வீழ்த்தியதால், இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த உருகுவே வெளியேற குரூப் சி-யிலிருந்து மெக்சிகோ, வெனிசூலா அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
தென் அமெரிக்கக் கால்பந்தின் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத உருகுவே அணி வெளியேறியிருப்பது அந்த அணிக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலடல்பியாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் சாலமன் ரோண்டன் அடித்த கோல் உருகுவே அணியை கலங்கடித்தது. இந்த வெற்றி மூலம் 2 போட்டிகளிலும் வென்ற வெனிசூலா அணி தனது காலிறுதி வாய்ப்பைப் பெற்றது. இந்தப் போட்டியிலும் உருகுவே நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரேஸ் ஆடவில்லை.
ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் உருகுவே கோல் கீப்பர் செய்த தவறை வெனிசூலா அருமையாக பயன்படுத்திக் கொண்டது. உருகுவே கோல் கீப்பர் பெர்னாண்டோ மஸ்லேரா கோல் லைனில் இல்லை. இதனைக் கண்டு கொண்ட வெனிசூலாவின் அலெயாண்ட்ரோ குவெரா 50 அடியிலிருந்து மிகவும் துணிச்சலான ஒரு ஷாட்டை உருகுவே கோலை நோக்கி அடித்தார், அதிர்ச்சிகரமான முயற்சி இது. கோலாகும் வேளையில் உருகுவே கோல் கீப்பர் பந்தை லேசாக தட்டி விட முடிந்தது, கிராஸ்பாரைத் தாக்கி பந்து மீண்டும் களத்திற்குத் திரும்பியது. அப்போது சாலமன் ரோண்டன் விழிப்புடன் அதனை எதிர்நோக்கி பந்தை கோலுக்குள் செலுத்தினார்.
68-வது நிமிடத்தில் வெனிசூலாவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. இம்முறை அடால்பெர்டோ பெனரந்தா என்ற வீரர் உருகுவே தடுப்பாட்ட வீரர்களுக்குப் போக்குக் காட்டி பந்தை கடத்தி வந்து செய்த கோல் முயற்சியை உருகுவே கோல் கீப்பர் மஸ்லேரா திசைதிருப்பினார்.
உருகுவே அணி இடைவேளைக்கு முன்னதாக இருமுறை வெனிசூலா கோல் பகுதிக்குள் ஊடுருவி கோல் வாய்ப்பைப் பெற்றது ஆனால் கோலாக மாற்ற முடியவில்லை. கடைசியில் ஆட்ட முடியும் தறுவாயில் சமன் செய்ய அருமையான வாய்ப்பு கிட்டியது ஜோஸ் காண்ட்ரிராஸுடன் ஏற்பட்ட ஒற்றை மோதலில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை வைடாக அடித்து நழுவ விட்டார் எடின்சன் கவானி. மற்றொரு வாய்ப்பில் வெனிசூலா கோல் கீப்பர் டேனி ஹெர்னாண்டஸ் ஷாட்டைத் தடுத்து விட்டார்.
இடையே வெனிசூலாவுக்கு 2-வது கோல் அடிக்க வாய்ப்பு ஏற்பட்டது. வெனிசூலாவுக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பு அது. கார்னர் ஷாட் ரொமூலு ஒடீரோவிடம் வர அவரது ஷாட் நூலிழையில் இலக்கை தவறவிட்டது. கடைசியில் வெனிசூலா 1-0 என்று வெற்றி பெற்றது.