ஊக்க மருந்து சோதனையில் தோல்வி: மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஒலிம்பிக் பங்கேற்பு சிக்கல்

ஊக்க மருந்து சோதனையில் தோல்வி: மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஒலிம்பிக் பங்கேற்பு சிக்கல்
Updated on
1 min read

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 74 கிலோ உடல் எடைப்பிரிவு மல்யுத்தத்தில் கலந்து கொண்டு பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் நர்சிங் யாதவ் ஊக்க மருந்து சோதனையில் தோல்விகண்டார்.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடைபெற்ற ஃப்ரீஸ்டைல் மல்யுத்த பிரிவில் வெண்கலம் வென்ற நர்சிங் யாதவ், ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கூடியது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் டெல்லியில் உள்ள ஊக்கமருந்து தடுப்பு இயக்ககத்தில் ஆஜரான நர்சிங் யாதவ் ரத்த மாதிரி சோதனையில், அதாவது பி-சாம்பிள் சோதனையில் தடைசெய்யப்பட்ட ஸ்டிராய்ட் மருந்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இவர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வது சிக்கலாகியுள்ளது.

இவரது பி-சாம்பிள் சோதனை முடிவுகள் திறக்கப்படும் போது நர்சிங் யாதவ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மற்றொரு வீரர் சுஷில் குமாருடன் நீண்ட சட்டப்போராட்டம் நடத்திய நர்சிங் யாதவ் தற்போது ஊக்க மருந்து ஸ்டிராய்ட் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது சிக்கலாகியுள்ளது.

ஊக்க மருந்து எடுத்துக் கொண்ட 67 ரஷ்ய தடகள வீரர்கள் ஒலிம்பிக் பங்கேற்புக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in