

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் ஆயில் நிறுவனங்களுக்கு இடையிலான 37-வது ஆண்டு டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடை பெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஐஓசி வீரரான சரத் கமல் 11-7, 11-5, 8-11, 11-5, 11-2 என்ற செட் கணக்கில் கெயில் வீரரான உத்கார்ஷ் குப்தாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி னார். மற்றொரு கால் இறுதியில் ஓஎன்ஜிசி வீரரான அமல் ராஜ் 9-11,11-4,11-7,5-11,11-2,11-9 என்ற செட் கணக்கில் சவுரவ் சகாவை தோற்கடித்தார்.
பிபிசிஎல் வீரரான சவுமியாஜித் கோஷ் 1-4 என்ற கணக்கில் ஓஎன்ஜிசி வீரர் ஹர்மித் தேசாயிடம் தோல்வியடைந்தார். கடைசியாக நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் ஓஎன்ஜிசி வீரர் சத்தியன் 4-1 என்ற கணக்கில் ஐஓசி வீரரான சுதான்ஷூ குரோவரை வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் அமல் ராஜ் 11-6, 8-11, 11-9, 5-11, 11-7, 11-8 என்ற செட் கணக்கில் சரத் கமலை தோற்கடித்தார். மற்றொரு அரை இறுதியில் சத்தியன் 11-9, 6-11, 11-2, 9-11, 13-11, 11-7 என்ற செட் கணக்கில் ஹர்மித் தேசாயை வீழ்த்தினார்.