Last Updated : 13 Sep, 2016 06:48 PM

 

Published : 13 Sep 2016 06:48 PM
Last Updated : 13 Sep 2016 06:48 PM

விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன்: நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன். அவர் 3 வடிவங்களிலும் சிறந்த வீரர் என நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. முன்னதாக நியூஸிலாந்து அணி 16-ம் தேதி மும்பை அணிக்கு எதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்திய தொடர் குறித்து நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

விராட் கோலி சிறந்த வீரர். மூன்று வடிவிலான ஆட்டங்களிலும் அவர் ஆதிக்கம் செலுத்துவது மிவும் சிறப்பு வாய்ந்தது. நிச்சயமாக நான் அவரை பாராட்டுகிறேன். கோலியின் ஆட்டத்தை பார்க்க விரும்புவேன் மற்றும் அவர் போன்ற வீரரிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் முடியும்.

ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் சிறந்த வீரர்கள்தான். இவர்களுடன் கோலியையும் என்னையும் ஒப்பிட்டால் அனைவருமே வித்தியாசமான வீரர்கள், வெவ்வேறு திறன் கொண்டவர்கள். தனது சொந்த திட்டங்கள் மூலம் போட்டியை அணுகுவதே விளையாட்டின் அழகு. வெற்றிக்காக அனைவரும் வித்தியாசமான செயல்களை செய்யமுடியும்.

கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் இருப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. சவால்களால் மகிழ்ச்சியே அடைகிறேன். அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் இருப்பதால் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடி வருகிறோம்.

அணியை முன்னேற்றம் அடைய செய்யவேண்டும் என்பதில் ஒரு கேப்டனாக எனது கவனம் அதிகம் உள்ளது. ஐபிஎல் அற்புதமான தொடர். இந்த தொடரில் நான் உட்பட அணியில் உள்ள பல வீர்கள் விளையாடி உள்ளோம். இந்த அனுபவம் டெஸ்ட் தொடருக்கான தயாரிப்புகளுக்கு உதவும்.

கடந்த சில ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் நாங்கள் விளையாடிய ஆடுகளங்களுக்கும் தற்போதைய ஆடுகளங்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கும். இதைக் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்திய அணியில் சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அனைவருமே அச்சுறுத்தக்கூடியவர்கள்தான். உள்நாட்டு தொடரில் தங்களது நிலைமைக்கு தகுந்தபடி சிறப்பாக விளையாடும் திறனையும் அவர்கள் கொண்டுள்ளனர்.

மார்ட்டின் குப்தில் கடினமாக உழைக்கக்கூடியவர் மற்றும் அவர் உலகத்தரம் வாய்ந்த வீரரும் கூட. குறுகிய வடிவிலான போட்டிகளில் அவர் பல்வேறு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறந்த திறனை வெளிப்படுத்துவார். அவருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

முந்தைய தொடரில் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது. அதேவேளையில் பேட்டிங்கும் வித்தியாசமாக அமைந்திருந்தது. தற்போதும் அப்படியே இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எங்கள் அணியில் மூன்று சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்த தொடர் அவர்களுக்கு சவாலாக இருக்கும். இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது கடினமான சாவல்தான். ஒரு அணியாக நாங்கள் இதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்.

இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.

26 வயதான வில்லியம்சன் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4393 ரன்கள் குவித்துள்ளார். இதில் 14 சதங்களும் அடங்கும். அவரது ரன்குவிப்பு சராசரி 51 ஆகும். ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வில்லியம்சன் 3-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x