இன்று நடைபெறும் 2-வது ஆட்டமும் மழையால் தடைபட வாய்ப்பு: நெருக்கடியில் யுவராஜ் சிங்

இன்று நடைபெறும் 2-வது ஆட்டமும் மழையால் தடைபட வாய்ப்பு: நெருக்கடியில் யுவராஜ் சிங்
Updated on
3 min read

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையே போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்தானது. மழை மிரட்டலுக்கு இடையே இரு அணிகளும் இன்று அதே மைதானத்தில் 2-வது ஒருநாள் போட்டியில் மோத உள்ளன. மோசமான பார்ம் காரணமாக யுவராஜ் சிங் நெருக்கடியுடன் களமிறங்குகிறார்.

போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 38 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் மழையால் தடைபட்டது. இதையடுத்து தொடங்கப்பட்ட ஆட்டம் சிறிது நேரத்தில் மீண்டும் மழை காரணமாக நிறுத்தப்பட்டது.

அப்போது இந்திய அணி 39.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. ஷிகர் தவண் 87, அஜிங்க்ய ரஹானே 62, யுவராஜ் சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 32, மகேந்திரசிங் தோனி 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நீண்ட நேரம் மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 26 ஓவர்களில் 194 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மழை மிரட்டலுக்கு இடையே இரு அணிகளும் இன்று மீண்டும் அதே மைதானத்தில் 2-வது ஒருநாள் போட்டியில் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் யுவராஜ் சிங் நெருக்கடியுடன் களமிறங்கு கிறார். அவரது பார்ம், டாப் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்தும் வகை யில் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அரை சதம் அடித்த யுவராஜ் சிங், அதன் பின்னர் அந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் சேர்க்கவில்லை. இலங்கைக்கு எதிராக 7, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 23, பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 22 ரன்களே சேர்த்தார்.

தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். 35 வயதான யுவராஜ் சிங்கின் கிளாஸ் பேட்டிங், அனுபவம் குறித்து எந்தவித விவாதமும் இதுவரை எழவில்லை. ஆனால் முன்பு போல் அவரால் சிறந்த பீல்டிங் திறனை வெளிப்படுத்த முடியவில்லை.

மேலும் பந்து வீச்சிலும் விராட் கோலி, யுவராஜை பயன் படுத்துவதில்லை. முற்றிலும் பேட்ஸ் மேனாக மட்டுமே அணியில் யுவராஜ் சிங் தற்போது இடம் பிடித்துள்ளார். அப்படியிருக்கையில் தொடர்ச்சி யாக சிறந்த திறனை வெளிப்படுத்த அவர் தவறுகிறார். முன்னாள் இந்திய கேப்டனும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளருமான ராகுல் திராவிட் சமீபத்தில் யுவராஜ் சிங்கின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். 2019 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு யுவராஜ் சிங்கின் எதிர்காலம் குறித்து அணி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 2 வருட காலம் உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி 45 முதல் 50 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் யுவராஜ் சிங் விஷயத்தில் கேப்டன் விராட் கோலியும் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.

அதிரடியாக விளையாடும் திறன் கொண்ட இளம் வீரரான ரிஷப் பந்த், தனது வாய்ப்புக்காக அணி யில் காத்திருக்கிறார். இதனால் அவரது வாய்ப்பை சீனியர் வீரரான யுவராஜ் சிங் நீண்ட நாட்களுக்கு தட்டிப் பறிக்க முடியாது.

காயம் காரணமாக தற்போது அணியில் இடம் பெறாத மணீஷ் பாண்டேவின் திறனையும் புறந்தள்ளி விட முடியாது. முழு உடல் தகுதியை பெறும் பட்சத்தில் அவர் அணியில் இடம் பிடிக்க மல்லுக்கட்டுவார்.

முதல் ஒருநாள் போட்டி மழை யால் கைவிடப்பட்டுள்ள நிலையில் அதே மைதானத்தில் இன்று நடை பெறும் 2-வது ஆட்டத்தில் அணியின் சேர்க்கையை மாற்ற விராட் கோலி விரும்ப மாட்டார். அரை சதம் அடித்துள்ள ரஹானே, டாப் ஆர்டர் பேட்டிங்கின் நம்பிக்கையை அதிகரித்துள்ளார்.

ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியதும் தனது இடம் பறிபோகும் என்று தெரிந்திருந்தும் கிடைத்த வாய்ப்பை ரஹானே பயன்படுத்திக் கொள்வது சிறப்பான விஷயம். மந்தமான ஆடுகளத்தில் அவர், ஷிகர் தவணுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 25 ஓவர்களில் 132 ரன்கள் சேர்த்து அணிக்கு வலு சேர்த்தார்.

இதேபோல் கே.எல்.ராகுல் இல்லாத நிலையில் ஷிகர் தவணும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சீராக ரன் சேர்த்த அவர், அந்த பார்மை மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலும் தொடர்வது பாராட்டுக்குரியது தான்.

இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படாமல் முழுமையாக நடைபெற்றால் மட்டுமே சைனா மேன் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவின் திறனை சோதித்து பார்க்க முடியும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறந்த திறனை வெளிப்படுத்தாததால் ஜடேஜாவுக்கு பதிலாக குல்தீப் யாதவுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அணிகள் விவரம்

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திரசிங் தோனி, ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

மேற்கிந்தியத் தீவுகள் :

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), தேவேந்திரா பிஷூ, ஜோனாதன் கார்டர், ராஸ்டன் சேஸ், மிகுவல் கம்மின்ஸ், ஷாய் ஹோப், அல்ஸார்ரி ஜோசப், எவின் லீவிஸ், ஜேசன் மொகமது, ஆஸ்லே நர்ஷ், கெய்ரன் பொவல், ரோவ்மான் பொவல், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in