

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்தியா அசத்தலாக வெற்றி பெற்றது.
ரோஹித் ஷர்மா மற்றும் கோலியின் அபார சதத்தின் துணையுடன், 360 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை, இந்திய அணி 43.3 ஓவர்களில் எட்டியது.
39 பந்துகள் மீதமிருந்த நிலையில், ஒரு விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து, இந்தத் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்தியா உலக சாதனை
சர்வதேச ஒருநாள் போட்டியில், அதிகபட்ச ரன் சேசிங் வெற்றியில், இந்தியா இரண்டாம் இடம்பிடித்து உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தது.
முன்னதாக, 2006-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 438 ரன்களைக் குவித்து தென்னாப்பிரிக்கா உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அதிகபட்ச சேசிங் ஸ்கோர்!
சேசிங்கில் இதுவே இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இங்கிலாந்துக்கு எதிராக 326 ரன்களை சேஸ் செய்து அடித்ததே முந்தைய இந்திய அணியின் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 123 பந்துகளில் 141 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தவான் 95 ரன்கள் எடுத்தார். கோலி ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் சதம் விளாசினார்.
ஆஸி. உலக சாதனை
முன்னதாக, இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது.
துவக்க ஆட்டக்காரர்களான ஃபின்ச் 50 ரன்களும், ஹுயூயஸ் 83 ரன்களும் எடுத்தனர்; அவர்களைத் தொடர்ந்து வாட்ஸன் 59 ரன்களையும், கேப்டன் பெய்லி ஆட்டமிழக்காமல் 92 ரன்களும், மேக்ஸ்வல் 53 ரன்களும் எடுத்தனர்.
ஒரு நாள் ஆட்டத்தில் முதல் 5 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தது, கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை. அதேபோல், ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ்சில் 5 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தது இது இரண்டாவது தடவை.
முன்னதாக, 2008-ல் நடந்த ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் இரண்டாவது பேட்ஸ்மேன் தொடங்கி, 6-வது பேட்ஸ்மேன் வரையில் 5 பேர் அரைசதம் அடித்து சாதனை புரிந்தது நினைவுகூரத்தக்கது.
ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டியில், இந்தியாவின் ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம், ஏழு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை, இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.