

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.
தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் ஆஸ்திரே லிய அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 111 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன் னிங்ஸை விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடி வில் 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி ரன்கள் ஏதும் சேர்க்காத நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை விளையாடியது. கே.எல்.ராகுல், முரளி விஜய் ஆகியோர் ரன் கணக்கை மந்தமாகவே தொடங் கினர்.
முரளி விஜய் 36 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் ஹசல்வுட் பந்தில், மேத்யூ வேடிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ராகுலுடன் சேதேஷ்வர் புஜாரா பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தார்.
ராகுல் 10 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்தில் சிலிப் திசையில் கொடுத்த கேட்ச்சை மேட் ரென்ஷா கோட்டைவிட்டார். இந்த வாய்ப்பை ராகுல் சரியாக பயன்படுத்திக்கொண்டார். மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 28 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது.
ராகுல் 31, புஜாரா 22 ரன்களுடன் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். 39-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. ஸ்டீவ் ஓ கீஃப் பந்தில் சிக்ஸர் பறக்க விட்ட ராகுல், 98 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் தனது 6- வது அரை சதத்தை கடந்தார். இந்த தொடரில் அவர் அடித்த 5-வது அரை சதமாகவும் இது அமைந்தது.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய புஜாரா 132 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 15-வது அரை சதத்தை கடந்தார். நிதானமாக விளையாடி வந்த ராகுல் 60 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் வீசிய பவுன்சரை ஹூக் செய்ய முயன்றார். ஆனால் பந்து மட்டையின் கீழ் விளிம்பில் பட்டு அருகில் நின்ற வார்னரிடம் கேட்ச் ஆனது.
ராகுல் 124 பந்துகளில், 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் இந்த ரன்களை எடுத்தார். அவர் 2-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் இணைந்து 87 ரன்கள் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே, கம்மின்ஸின் அதே ஓவரில் தலா ஒரு பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார்.
இதன் பின்னர் இந்த ஜோடி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத் தியது. தேநீர் இடைவேளையில் இந்திய அணி 60 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. புஜாரா 53, ரஹானே 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இடைவேளைக்கு பின்னர் இருவரும் கடைசி செஷனை தொடர்ந்து விளையாடினார்கள்.
இந்த செஷனில் நாதன் லயன் நெருக்கடி கொடுத்தார். நிதானமாக விளையாடி வந்த புஜாரா 151 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் ஷார்ட் லெக் திசையில் நின்ற ஹேண்ட்ஸ்கம்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களமிறங்கிய கருண் நாயர் பொறுப்பில்லாமல் விளையாடி 16 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டையும் நாதன் லயனே கைப்பற்றினார். 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அஸ்வின் விரைவாக ரன் சேர்த்தார்.
இதனால் ரன்விகிதம் சற்று உயரத் தொடங்கியது.75-வது ஓவரில் அணியின் ஸ்கோர் 200-ஐ கடந்தது. 104 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரஹானே விக்கெட்டை பறிகொடுத்தார். நாதன் லயன் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தில் தடுப் பாட்டம் ஆட முயன்ற போது பந்து எட்ஜ் ஆகி சிலிப்பில் நின்ற ஸ்மித்திடம் சிக்கியது. ரஹானே, அஸ்வினுடன் இணைந்து 49 ரன்கள் சேர்த்தார்.
சிறிது நேரத்தில் அஸ்வினையும் நாதன் லயன் வெளியேற்றினார். அவர் 49 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 221 ஆக இருந்தது. இதையடுத்து சாஹாவுடன் இணைந்த ஜடேஜா அதிரடியாக விளையாடினார்.
அவர், நாதன் லயன் மற்றும் ஸ்டீவ் ஓகீஃப் ஆகியேராது ஓவரில் தலா ஒரு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். 88-வது ஓவரில் ஆஸ்ரேலிய அணி புதிய பந்தை கையில் எடுத்தது. கம்மின்ஸ் வீசிய இந்த ஓவரின் கடைசி பந்து சாஹாவின் மட்டையில் பட்டு முதல் சிலிப்பில் நின்ற மேட் ரென்ஷாவை நோக்கி சென்றது. ஆனால் அதை அவர் பிடிக்க தவறினர்.
நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 91 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. சாஹா 10, ஜடேஜா 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 4 விக்கெட்களுடன் இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.