

வரும் மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்கா அணி நியூஸிலாந்துக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்காக செல்கிறது, இதில் டெஸ்ட் ஆட்டங்களுக்கு மட்டும் இந்தத் தொடரிலிருந்து அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் விலகியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறார் டிவில்லியர்ஸ். முழங்கை காயமடைந்த டிவில்லியர்ஸ் அதிலிருந்து முழுதும் குணமடைந்து விட்டாலும் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியது குறித்து கூறும்போது, “என் மனதில் சில விஷயங்கள் கொஞ்ச காலமாக இருந்து வருகிறது இதனை முதலில் அமைதிப் படுத்த வேண்டும். இன்னும் உலகக்கோப்பையை நாங்கள் வெல்லவில்லை என்பதும் அதில் ஒன்று. எனவே 2019 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும். ஒவ்வொரு வடிவத்திலும் நான் சீரிய முறையில் ஆட முடியாது.
அதனால்தான் நியூஸிலாந்துக்கு எதிராக நானே விலகினேன். ஒருநாள் போட்டிகளுக்கு அங்கு ஆடச்செல்வேன், ஆனால் நிச்சயமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறவில்லை. ஒரு கட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன். என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு 2019 உலகக்கோப்பைதான் முக்கியமாகத் தெரிகிறது. கோப்பையை வெல்வதை நாங்கள் உறுதி செய்தாக வேண்டும். கோப்பையை வெல்வதை நான் உறுதி செய்ய வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விடமாட்டேன் ஆனால் குடும்பம், நீண்ட காலம் வெளிநாட்டி இருப்பது போன்ற காரணிகளும் இருந்தாலும் 2019 உலகக்கோப்பையை வெல்வதே இப்போதைக்கு எனது பிரதானமாக உள்ளது.
எனவே அனைத்து வடிவங்களிலும் ஆடிக் கொண்டிருந்தால் மன, உடல் ரீதியாக நான் என் சிறப்பான ஆட்டத்தை ஆட முடியாது.
இப்போது திட்டமிடப்படும் பயணங்கள் மிக நெருக்கமாக அமைக்கப்படுகிறது. இதில் அனைத்து வடிவங்களிலும ஆடுவது மிகமிகக் கடினம். நிறைய கிரிக்கெட் வீரர்கள் இப்போதெல்லாம் 35 வயதுக்கு மேல் ஆட முடிவதில்லை. எனவே 2019,2029 வரை முழு உடற்தகுதியுடன் இருந்து அணிக்காக கோப்பையை வெல்வதே எனது குறிக்கோள். காயத்திலிருந்து மீண்டு முழு உடல்தகுதி பெற்றது மனநிறைவையும் உற்சாகத்தையும் அளிக்கிறது” என்றார்.