

ஆடவருக்கான 49 கிலோ எடை பிரிவு பளுதூக்குதலில் பங்கேற்ற இந்தியாவின் பர்மான் பாஷா 4-வது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். மூன்று முயற்சிகளில் அவர் மொத்தம் 140 கிலோ எடை தூக்கினார்.
வியட்நாமை சேர்ந்த காங் வான் லீ 181 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். பாரா ஒலிம்பிக் போட்டியில் வியட்நாம் பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாக அமைந்தது. ஜோர்டானின் ஓமர் குவாரா வெள்ளிப் பதக்கமும், ஹங்கேரியின் நன்தோர் டன்கெல் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் பிரேசில் நாட்டை சேர்ந்த டேனியல் தியாஸ் தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்க வீரர் ராய் பெர்கின்ஸை அவர் 10 விநாடிகளில் தோற்கடித்து முதலிடம் பிடித்தார்.
28 வயதான டேனியல் தியாஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெல்லும் 16-வது பதக்கம் இதுவாகும். இதன் மூலம் அவர் பிரேசில் நாட்டின் மைக்கேல் பெல்ப்ஸ் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.
பாரா ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளில் பதக்கப் பட்டியலில் சீனா ஆதிக்கம் செலுத்தியது. 7 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலத் துடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 2-வது இடத் திலும், உஸ்பெகிஸ்தான் 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.