

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரகம் ஃபோர்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது 45 மாத ஒப்பந்தம் முடிவதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரான கிரகம் ஃபோர்ட் இதற்கு முன் 2012லிருந்து 2014 வரை இலங்கை அணி பயிற்சியாளராக இருந்தார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மீண்டும் அணிக்கு திரும்பினார். அவர் பொறுப்பேற்றதும், இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில், அப்போதுமுதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனைத்து போட்டிகளிலும் வென்று இலங்கை அணி வைட் வாஷ் செய்தது. மேலும் ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரையும் வென்றது.
ஆனால், சமீபத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் இலங்கை வெளியேறியது. மேலும் இலங்கை நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை வீரர்கள் குண்டாக இருப்பதாக விமர்சித்திருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் தற்போது பயிற்சியாளரின் ராஜினாமாவும் அணியை பாதிக்கும் எனத் தெரிகிறது. ஃபோர்ட், 2019 உலகக்கோப்பை வரை பயிற்சியாளராக இருக்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. .
கிரகம் ஃபோர்டின் இந்த முடிவு இலங்கை கிரிக்கெட் வாரியமும் சேர்ந்து எடுத்த பரஸ்பர முடிவு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ட் தனது அறிக்கையில், "இலங்கை அணி என்னுள் ஒரு அங்கமாக வளர்ந்துவிட்டது. பயிற்சியாளராக நாங்கள் பிரிய முடிவெடுத்தாலும் அணிக்கு எப்போதும் என் இதயத்தில் ஒரு சிறிய இடம் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக மாற்றுப் பயிற்சியாளர் எவரும் அறிவிக்கப்படவில்லை. இலங்கை அணி அடுத்து தங்கள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் வரும் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து 5 ஒருநாள் மட்டும் 1 டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.