Published : 10 May 2017 07:10 PM
Last Updated : 10 May 2017 07:10 PM

தோல்விகளை ஏற்றுக் கொண்டு நகர வேண்டும்: ஏமாற்றத்திலும் கோலி ஆறுதல்

நடப்பு ஐபிஎல் தொடரில் அடி மேல் அடி வாங்கிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, தோல்விகளை ஏற்றுக் கொண்டு மேலே நகர வேண்டும் என்று தனக்கும் அணியினருக்கும் ஆறுதல் வார்த்தை பகன்றுள்ளார்.

பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலி கூறியதாவது:

என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் எங்கள் அனைவரையும் இந்தத் தோல்விகள் காயப்படுத்தியுள்ளது. விஷயங்களை வெற்றிப்பாதைக்குத் திருப்ப எவ்வளவோ முயற்சி செய்தோம் ஆனால் அது நடக்கவில்லை. விளையாட்டில் இது சகஜம்தான். இதனை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி செல்ல வேண்டும்.

உண்மையில் சொல்லப்போனால் வரும் ஆண்டுகள் குறித்து எங்களிடம் ஒருவிதமான சவால்கள் குறித்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஒரு அணியாக நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும்.

கடந்த ஆண்டு அருமையாக ஆடினோம், இந்த ஆண்டு எதிர்மறையாகத் திரும்பிவிட்டது. இந்த அருமையான ஆட்டத்தின் இருபகுதிகளையும் சமமாகவே பாவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு நிச்சயம் வலுவாகத் திரும்புவோம். இப்போதைக்கு இந்த சீசன் இப்படி முடிந்திருக்கும் போது எங்களால் இதை மட்டுமே கூற முடியும்..

இந்நிலையில் அணிக்கு உத்வேகம் அளிப்பது கடினம்தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்த்த் தோல்விகளுக்குப் பிறகு நம்மை நாம் திரட்டிக் கொள்வது கடினம்தான். ஆனால் வீரர்கள் தங்களுக்கு உத்வேகம் அளித்துக் கொள்ள வேண்டும். அணியை தங்கள் கைகளில் எடுத்து வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த மட்டத்தில் ஆடும் வீரர்கள் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்தி அணியை தங்கள் வழியில் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

இத்தகைய சூழ்நிலைகளில் இதைத்தான் செய்ய முடியும். ஏனெனில் ஓரிரு வீரர்கள் பிரச்சினை என்றால் நாம் பிரச்சினையை தீர்க்கலாம், அணி மொத்தமுமே சரியாக ஆடவில்லை. எனவே இது எங்கள் அனைவருக்குமே ஏமாற்றமாகவே உள்ளது. எனவே ஓய்வறையில் அமைதியையும் பொறுமையையும் காக்கிறோம். இதை நாங்கள் அருமையாகவே கையாண்டோம். ஏனெனில் அனைவருமே இத்தகைய உணர்வுகளில் உள்ளனர்.

நாங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தோமே தவிர தனிநபர்கள் மீது இதற்கான பொறுப்பை சுமத்தவில்லை. தோல்விகள் வெறுப்பை ஏற்படுத்தும் என்பது உண்மைதான், ஆனால் நாங்கள் இதனை ஏற்றுக் கொண்டு அமைதியாகச் செயல்பட்டோம்.

சில வேளைகளில் நகைச்சுவை உணர்வுடன் இதனை எதிர்கொண்டோம். எது எப்படியோ எங்கள் அனைவருக்கும் இது கற்றுக் கொள்ளும் பாடமாகும்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x