Published : 17 Sep 2016 09:27 AM
Last Updated : 17 Sep 2016 09:27 AM

லைகா கோவை கிங்ஸ் அணியுடன் இன்று மோதல்: இறுதிப்போட்டி முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த ஆட்டம் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. லீக் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 ஆட்டத்தில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. அந்த அணியில் தொடக்க வீரர் கோபிநாத் 229 ரன் சேர்த்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரான தலைவன் சற்குணம் 226 ரன்னும், வசந்த் சரவணன் 186 ரன்னும் எடுத்து உள்ளனர்.

மூவரும் தலா 2 அரை சதம் அடித்து உள்ளனர். கேப்டன் சதீஷ் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர். பந்துவீச்சில் அந்தோணி தாஸ் 11 விக்கெட் வீழ்த்தி உள்ளார். சாய் கிஷோர் 9 விக்கெட்களும், அலெக்சாண்டர் 8 விக்கெட்களும் கைப்பற்றி உள்ளனர்.

திருவள்ளூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஷ்வாத் முகுந்தன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 ஆட்டத்தில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று உள்ளது. இதனால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x